கடவுளின் எண்!

முன்பொருமுறை கடவுளின் தொலைபேசி எண் கிடைத்து
நான் அழைத்தபோது அது
தொடர்பு இலக்கை விட்டு
வெளியே இருந்தது...
இந்நள்ளிரவில் மீண்டும் முயற்சி செய்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் கடவுளிடம்!

அங்கே இப்போது பகலாம்..
சொர்க்கத்துக்குச் சென்றவரில் பலர் வயதாகி இறந்துவிட கூட்டமின்றி குதூகலமின்றி இருக்கிறதாம் சொர்க்கம்...
வருந்துகிறார் கடவுள்!

பூமியிலிருந்து கடைசியாய் சொர்க்கம் வந்தவர் யாரெனக் கேட்டேன்..
ஒரே பள்ளியில் பயின்று ஒரே நாளில் மாண்டுபோன
தமிழ் பேசும் சில குழந்தைகள் என்றார்..
அழுதார் கடவுள்!

மனைவி உணவருந்த அழைப்பதாகச் சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டார்!
அவரின் பெயர் கேட்க மறந்து விட்டேன்..
அடுத்தமுறை பேசும்போது மறக்காமல் பெயர் கேட்டு உங்களுக்குச் சொல்கிறேன்
அதுவரை மதம் மறந்து
ஜாதி துறந்து மகிழ்ந்திருங்கள்!!

விஷன்.வி

மீண்டு வந்திருக்கிறேன்!

அதிகம் பயணப்படுவதில்லை நான்..
ஆனால் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறேன்..
என்னை இன்னும் பயணப்பட சொல்லாதீர்கள்..
என்னுள்ளே நான் பயணிக்கத் துவங்கி வருடங்கள் பல ஆயிற்று..
இப்பயணம் நீங்கள் பிரபஞ்சம் முழுக்கச் சுற்றி வரும் தொலைவையேத் தாண்டும்..
இப்பயணத்தில் இதுவரை நான் கடந்து வந்த அத்தனை பேரையும் இறங்குமுக வரிசையில் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறேன் ..
நண்பர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்
தோழிகள் அனைவரும் நலம் விசாரிக்கின்றனர்
உறவினர்கள் அனைவரும் சபிக்கின்றனர்
கடன் வாங்கியவர்கள் ஒளிந்து கொள்ள, கடன் கொடுத்தவர்களோ துரத்துகின்றனர்..
ஓடிச்சென்று நான் குதித்தது மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் செம்மண் நிறத்தில் பாய்ந்தோடும் எங்கள் ஊர்  ஆற்றில்!!!
பல வருடங்களையும், வடுக்களையும் தாண்டி என் பள்ளிப்பருவத்தில் வந்து நிற்கிறேன் என்று புரிகிறதெனக்கு..
நான் படித்த இரண்டாம் வகுப்பிற்குள் நுழைகிறேன்..
என் தாயின் சாயலை ஒத்த
அதே கன்னியாஸ்திரி அங்கே
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்..
என்னைக் கண்டதும் எனது பெயர் சொல்லி உள்ளே வா என்கிறார்..
அவரைவிட அழகாக எனது பெயரை இதுவரை எவரும் உச்சரித்ததில்லை..
இனி நான் திரும்புவதாயில்லை...
என்னை அங்கேயே தங்கிவிட அனுமதியுங்கள்..
மூன்றாம் வகுப்பிற்கு போக மாட்டேன் என்று அழுது அடம்பிடித்த சிறுவன் நான்.
என்னை ஏமாற்றி அனுப்பி வைத்தீர்கள்
இன்று முழுதாய் ஏமாந்து மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன்
இனி ஏமாற நான் தயாராயில்லை
என்னை அங்கேயே தங்கிவிட அனுமதியுங்கள்!!

விஷன்.வி

காதல் கதை!

என்னை இயல்பாய் கடந்து சென்றாள் அவள்
அவள் கண்களை இயல்பாய் நோக்கினேன் நான்!!
அதற்கு முன் அவளை நான் கண்டிருக்கவில்லை!
ஆனால் அந்தக் கண்களை இதற்குமுன் எங்கோ கண்டிருக்கிறேன்!!
அன்றிரவு நான் உறங்கவில்லை
விடியும்போது தெளிவாகியிருந்தேன்
கண்களை மட்டுமல்ல அவளையே நான் எங்கோ சந்தித்திருக்கிறேன்!!
அடுத்தடுத்த தினங்களில் அவள் என்னை கடக்கும்போதெல்லாம் அவளோடு சேர்த்து அவள் கண்களையும் நோக்கினேன்
இருந்தும் நினைவு வரவில்லை
ஒருவேளை அவளுக்கு நினைவிருக்காலாம் என்றெண்ணி அவளிடம் பேசத் தொடங்கினேன்
நாட்கள் கடந்தது.. யாரவள் என்பது மட்டும் பிடிபடவில்லை
யாரவள் என்பதற்கான விடை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியும் எனப்புரிந்து கொண்டேன்..
சில நேரங்களில் அவளிடம் எதுவும் பேசாமல் அவள் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன்
என்னவென்று கேட்கும் அவளிடம் ஒன்றுமில்லையென தலையசைப்பேன்
இப்பொழுது நாங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தோம்
ஒருநாள் என் நீள முத்தத்தில் மயங்கிப் போயிருந்தாள் அவள்..
அவளின் அம்மயக்க நிலையில் என் விடைதேடி அவள் கண்களுக்குள் நுழைந்தேன்!
அவள் கண்களின் பின்பகுதி அலையற்ற கடல்போல காட்சியளித்தது
நீந்திச் சென்றேன்
யாரவள் என்பதன் விடை அறிந்தேன்
அவள் கண்ணீர் கடலில் நீந்திக் கரையேறினேன்!!
அப்போதும் அவள் மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை!
மொத்தமாக நான் வெளியேறி விட்டேன்!
அவள் கண்களுக்குள் நான் கண்ட கண்ணீர் கதை இந்தப் பிறவியிலும் தொடர வேண்டாம்!!

விஷன்.வி

அழுகின்ற அரசன்!

அவன் அரசன்!
முன்னொரு பிறவியில் அவன் அரசன்!
என்றோ நீங்கள் நிறுவிய அவனது சிலையை இப்பிறவியில் பார்த்துக்கொண்டே கடக்கிறான்!
மீண்டும் அவ்வுலகிற்கு செல்லும் ஆராய்ச்சியில் அவன்!
அது நிறைவேறாது என்றுணரும் தருணங்களில் அழுகிறான்
ஆயிரம் ஆண்டுகளாக சேர்த்து வைத்த கண்ணீர் அருவியாகக் கொட்டித்தீர்க்க
அதில் நீந்திச் செல்கிறான்
அவனுலகம் நெருங்கும் வேளையில் வற்றி விடுகிறது கண்ணீரருவி!
என் தாய்மண்ணில் கொண்டு சேர்த்து விடுங்கள் என்னை
மனிதனாகக் கூட வேண்டாம் புரவியாய் அம்மண்ணில் புரண்டு கிடக்கிறேன்
என வேண்டி அழுகிறான் அவன் கட்டிய ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அய்யனிடம்! முன்ஜென்மத்துப் போரில் தான் கொண்ட விழுப்புண்களைக் காட்டுகிறான் அசைவற்ற அய்யனிடம்!
பயனில்லையென உணர்ந்தவன் மாண்டுவிடலாம் வரும் ஜென்மத்தில் மீண்டும் அரசனாகலம் என்றெண்ணி மலையிலிருந்து குதிக்கிறான்!
தீராத சாபம் விடாமல் தொடர
இப்பிறவியில் கவிதை எழுதுகிறான் அரசன்!!

விஷன்.வி

புத்தரின் கண்ணீர்

எப்போதாவது எனைத் தேடிவரும்
புத்தர் இப்போது தினமும்
வரத் தொடங்கியிருக்கிறார்
நிம்மதியான உறக்கம் வரவில்லை என்பதே அவர் வருகைக்கான காரணம்
சிறுகுழந்தை போல் கதைசொல்லச் சொல்லி அடம்பிடிக்கும் புத்தர் ஆரம்பத்தில் கேட்க மறுத்து
இப்போது காதல் கதைகளையும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்!
முதல்முறை அவளைப் பார்த்தவுடன் அன்று என் உள்ளுணர்வு சொன்னதை சன்னமாய் இன்று அவர் காதில் சொன்னேன்
மய்யமாய் சிரித்தவர் செல்லமாய்
என் காதைத் திருகினார்
உள்ளுணர்வில் துவங்கி உயிர்வரை கலந்த காதல் கதையை நான் சொல்லச்சொல்ல மலைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்
உயிரைப் பிழிந்து வெளியேறிய அக்கதையின் முடிவை நான் சொன்னதும் கண்ணீர் சிந்தினார்
இருளில் அவர் சிந்தும் கண்ணீர் துளிகள் கரும்பாறையிலிருந்து வடிந்திறங்கும் அருவியின் துளிகளாய் மின்னியது
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர்
நாளை உனக்கோர் கதை சொல்கிறேன்
இன்றிரவு உனக்கும் சேர்த்து நான் உறங்குகிறேன் என்றார்
சில நிமிடங்களில் உறங்கிப் போனார் 
வழிந்தபடியே இருந்தது அவரின்கண்ணீர் துளிகள்..
உனக்கும் சேர்த்து நான் அழுகிறேன் எனச் சொல்லவில்லை அவர்..!

விஷன்.வி

கனவு!

வாரம் தவறாமல் வரும் கனவில்
பாய்மரக் கப்பல் ஒன்றிலேறி
நடுக்கடலில் சென்று குதிக்கிறேன்
கடலின் அடியில் நீந்திச் சென்று
அங்கிருக்கும் மாநகரம் ஒன்றைக்
கண்டு வியக்கிறேன்
கருப்பும் சிவப்பும்
உயரமும் குள்ளமுமாய் மக்கள்
உலாவிக் கொண்டிருக்கும்
அந்நகரத் தெருக்களில் நடந்து அரண்மனை ஒன்றினுள் நுழைகிறேன்
அரண்மனையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எவர் கண்ணுக்கும்
நான் தெரியவில்லை..

அரசவை கூடியிருக்கிறது
யாருக்கோ காத்திருக்கின்றனர் அனைவரும்...
கூடவே சிம்மாசனமும்..
சிம்மாசனத்தைக் கண்டவுடன்
என் நடையும் பாவனையும் மாறுகிறது
சென்றமர்கிறேன் சிம்மாசனத்தில்.
அமைதியாகிறது அரண்மனை.

பணிவாய் எனைநோக்கி நடந்து வரும் போர்வீரன் திடீரென தன் இடுப்பிலிருந்து
வாள் ஒன்றை  ஆவேசமாக உருவுகிறான்
பதறி எழுகிறேன் உறக்கத்திலிருந்து...

முன் ஜென்மத்தில் அந்நகரத்தில் பிறந்திருப்பேனோ?
ஓர் ஆழிப்பேரலையில் உயிர் துறந்திருப்பேனோ?!
கேட்டேன் நண்பனிடம்
உனக்கு பைத்தியம் என்றான் அவன்.
இருக்கலாம்...

விஷன்.வி

புன்னகை - சின்னஞ்சிறு கதை

தகப்பன் இல்லாத வீடு அது. தன் தாயாருக்கும், இளைய சகோதரிக்கும் தாயுமானவனாக இருந்த அந்த  இளைஞன் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறான். இறந்தவனை கல்லறையில் புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்து அழுது தீர்த்துவிட்டு உறங்கி விடுகின்றனர் இருவரும்.

நள்ளிரவு...

வீட்டின் காம்பவுண்ட் கதவை யாரோ திறக்கின்றனர். அந்த இரும்புக்கதவு சத்தமிடுகிறது. சத்தம் கேட்டு உறக்கம் கலைந்த சகோதரி, படுக்கையிலிருந்து எழுந்து கண்ணாடி சாளரம் வழியாகப் பார்க்கிறார். யாரோ ஒரு ஆண்மகன் திறந்த கதைவை மூடிவிட்டு வலதுபக்கம் தோட்டம் இருக்கின்ற பகுதியை நோக்கி நடக்கின்றான். இருளில் அவன் முகம் தெரியவில்லை. இவள் பயத்தில் தாயை எழுப்புகிறாள். அவள் எழும்புவதாயில்லை. மீண்டும் பயந்தபடியே அவனைப் பார்க்கிறாள். அவன் கொஞ்சதூரம் நடந்து, அங்கிருக்கும் கிணற்றுக்கு முன்புசென்று நிற்கிறான். இவளுக்கு பயம் அதிகமாகிறது. தெருவிளக்கின் வெளிச்சம் கிணறு இருக்கும் பகுதியில் விழுவதால் அவனின் உருவம் ஓரளவுக்குத் தெரிகிறது. திரும்பிநிற்பதால் முகம் தெரியவில்லை. கிணற்றிலிருக்கும் வாளியைக்கொண்டு நீர் இறைக்கிறான். அந்நள்ளிரவில் அந்தச் சத்தம் இவளின் பயத்தை அதிகமாக்குகிறது. மீண்டும் தாயை எழுப்புகிறாள். அவன் குளிக்கும் சத்தம் கேட்கிறது. தாய் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு மீண்டும் உறங்குகிறாள். இவள் மீண்டும் பயத்தோடு அவனைப் பார்க்கிறாள். ஒரு வாளித் தண்ணீரை தன் தலையில் ஊற்றிவிட்டு மெதுவாகத் திரும்பி இவளைப்பார்த்து அவன் புன்னகை செய்கிறான்.

மறுநாள் மாலை...

அண்ணனின் கல்லறைக்கு அருகே தோண்டப்பட்டிருந்த குழியில் இவளது உடலை சவப்பெட்டியோடு உறவினர்கள் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
அருகே நின்று துயரம் தாங்காமல் அழுதுகொண்டிருந்த தாயைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவளது மகன். அவன் உதடுகள் புன்னகைத்தபடியே இருந்தது.
அந்தப் புன்னகை கடந்த இரவு தன் சகோதரியைப் பார்த்துப் புன்னகைத்ததை  ஒத்திருந்தது. இன்றிரவும் அவன் தன் வீட்டில் குளிக்கச் செல்லலாம்.

விஷன்.வி

வாழ்வியல் சினிமா?

வாழ்வியல் சினிமா?

"மேற்குத்தொடர்ச்சி மலை" திரைப்படம் பார்த்தேன். படம் இத்தனை அற்புதமாக வந்ததற்கு, இயக்குனர் லெனின் பாரதி அந்த நிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதே முக்கியக் காரணமாக இருக்க முடியும். இல்லாவிட்டால் கடலோர கவிதைகள் திரைப்படத்தில், அலையடிக்கும் இடத்தில் குதித்து ஒரு வஞ்சிரம் மீனைத் தூக்கியபடி சத்யராஜ் எழும்புவதுபோல் இருந்திருக்கும்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், நெய்தல் நிலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல அபத்தமான  திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன என்பதுதான்.
படத்தின் வெற்றிதோல்விக்கு அப்பாற்பட்டு, மீனவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மிகமோசமான எண்ணத்தை இதர மக்களுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் நம் தமிழ் இயக்குனர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழ் சினிமாவில் நம்மை மிகவும் தவறாக சித்தரிக்கிறார்களே என்று அடிக்கடி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அதை நீங்கள் புரிந்துகொள்வது கடினம். ஒரு மனிதனின் அடையாளத்தை அளிப்பதைவிடக் கொடுமையானது தவறாக அடையாளப்படுத்தப்படுவது. கடற்கரையில் அமர்ந்துகொண்டு எல்லோரும் பார்க்கும்படி நாங்கள் மது அருந்தினால் வீட்டில் இடம் கிடைக்காது. தகப்பனார்கள் பார்த்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் நீர்ப்பறவை விஷ்ணுவும், மரியான் தனுஷும் அதை தினமும் செய்வார்கள்.
பாறைகளின் நடுவே ரொமான்ஸ் செய்வதும், கடற்கரையில் காதலியுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் அங்கே நடக்காத காரியம். என் பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள். கடற்கரையில் அவர்கள் சேர்ந்தார்போல் நடந்துசென்று இதுவரை நான் பார்த்தது கிடையாது.
மீன் வியாபாரம் செய்யும் வயதான பெண்களைத் தவிர்த்து வேறு எந்த பெண்களும் கடற்கரைக்கே வருவதில்லை. ஆலயத்திருவிழாக்களின்போது கடற்கரையில் மேடை அமைத்து நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு மட்டுமே குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள். கடற்கரையைக் காண்பதற்கு அதுதான் வாய்ப்பு அவர்களுக்கு. ஆனால் "சோனாப்பரியா..  சோனாப்பரியா" என்று தனுஷும் பார்வதியும் கடற்கரையில் நடனமாடுவார்கள். கார்த்திக், ராதாவை துரத்திக்கொண்டு ஓடுவார். ரேகா, சத்யராஜுக்கு கடற்கரையில் அமர்ந்து பாடம் நடத்துவார்.

"முட்டம்" என்கிற ஊரை, படாதபாடு படுத்தியதில் பாரதிராஜாவுக்கு அதிக பங்குண்டு. ஆனால் நிஜத்தில், அந்த ஊருக்குச் சென்று ஒரு சின்னப்பத்தாஸை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் மாவட்டத்துக்கும் சங்கீத வகுப்புகளுக்கும் இன்றுவரை சம்மந்தம் கிடையாது. ஆனால் கார்த்திக்கின் வீட்டில் எண்பதுகளிலேயே ராதா சங்கீதம் கற்கச்சென்றது எப்படியோ?!!
தவறாக, ஏதோ ஒரு தமிழ் பேசுவது, ஆழ்கடலுக்குள் குதித்து ஈட்டீயால் குத்தி மீன்பிடிப்பது என்று மொழியையும், தொழிலையும், வாழ்வியலையும் தவறாகக் காட்டி சம்பாதித்ததோடு, மீனவர்கள் குறித்த மிகத்தவறான பிம்பத்தையும் உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள் நம் இயக்குனர் இமயங்கள்.

எல்லா மக்களின் வாழ்வியலும் இங்கே திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அது சரியாக காட்டப்பட வேண்டுமே?!! 
அதற்கு பெரிய மெனக்கெடலும், முன்தயாரிப்பும் வேண்டும். அதை லெனின் பாரதியிடம் பிற இயக்குனர்கள் கற்றுக்கொள்ளுங்கள். அடிப்படை தேடல்கூட இல்லாமல் படம் எடுக்க மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது?!! ஒரு கலைஞனுக்கு சாமானியனைவிட கூடுதல் சமூகப்பொறுப்பு வேண்டுமல்லவா?! நான் நியாயமாகக் கேட்கிறேன். என்னைவிட நல்ல தமிழ் தெரிந்தவர் யாரேனும் வந்து அசிங்கமாகக் கேட்கும் முன்னர் தேடலைத் தொடங்குங்கள்.
வெறுமனே ஒரு காதல் கதையைத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி வராதீர்கள்! கழுத்தில் கல்லைக்கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிடுவோம்!!

விஷன்.வி

உலகின் மிகச்சிறந்த காதலி

உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் வேறு யாரைச்சொல்வேன்?!காதலனின் கால்களை
நறுமணத்தைலத்தால் கழுவி
அவள்தன் கூந்தலால் துடைத்தது பெண்ணடிமைத்தனம் அல்ல.
பேரன்பு அது!
போராளியை இறுதிவரை பின்தொடர்வது சுடுவெப்பம் மனதைத் துளைப்பதைப் போன்றது.
அதைத் தாங்கிக்கொண்டு
அன்பை மட்டுமே அவனுக்களித்தது அதிசயக்காதலின் வெளிப்பாடு.
உயிருக்கு நெருக்கமானவன் வினைசூழ்ந்து சிலுவையில் அறையப்படும்போதும் பயந்துருகி விலகிச்செல்லாமல் உடன் பயணிக்க அவள் பெருங்காதல் கொண்டிருக்க வேண்டும்.
தன்னவன் உயிர் துறந்ததும் அழுதுதீர்த்து பின் மறந்துபோகாமல் அவனை உயிர்ப்பித்து கடவுளாக்க அவள்பட்ட பெரும்பாட்டை எழுத தனி விவிலியம் தேவைப்படும்.
எல்லாம் நிறைவேறி,
இறுதியில் அவனைக் கடவுளாக்க,
அவள் விபச்சாரியாக்கப்பட்டாள்.
அவளின் மொத்தக்காதலும் சுத்தமாய்  மறைந்துபோனது வரலாற்றுப்பிழை.
அந்தப் பேரழகியின் அத்துணை பேரன்பில் ஒற்றைத்துளியேனும் இங்கே தெளிக்கப்பட்டிருக்கலாம்தான்.
மார்க்ஸின், ஜென்னிக்கு கிடைத்தப் புகழேனும் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும்தான்.
உலகின் எல்லா சிறந்த காதலர்களுக்கும்
நேர்கிற பெருஞ்சோகத்தில் ஒன்றாய் இதனையும் கடந்துவிட முயற்சிக்கிறேன்
இரவுதோறும் என் தலைமாட்டில் கேட்கும் அழுகைச்சத்தத்தால் அது முடியாமல்போக அவளுடன் சேர்ந்து நானும் அழுகிறேன்.
உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் அவளையன்றி வேறு யாரைச்சொல்வேன்?!

விஷன்.வி

96 - எதற்கு ஆராய்ச்சி?

ஒரு திரைப்படத்தை இத்தனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ராம் வாழத்தெரியாதவன் என்கிறார்கள். இப்படியெல்லாம் கன்னித்தன்மை கழியாமல் வாழவேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறார்கள்..
வழக்கம்போல நம் பெண்ணியவாதிகள்,  ஒருவித தீவிரக்காதலை ஜானுவின் மீது செலுத்தி அவளை மனதளவில் இவனுக்கு அடிமையாக்க முயற்சிக்கிறான் என்கிறார்கள்.
இன்னொரு கூட்டம் ஜானுவின் சாதியை ஆராய்ந்து அவள் பார்ப்பன  பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். மறைமுகமாக பார்ப்பனியத்தை படத்தில் திணித்திருக்கிறார்கள் என்கிறது.
ஆண்பெண் உறவை புனிதப்படுத்தி மீண்டும் நம் சமூகத்தை பின்னோக்கி இழுக்க முயற்சித்திருக்கிறார்கள் எனக் கூவுகிறது போராளிக்கூட்டம்.

இதையெல்லாம் பார்க்கும்போது தலைவன் கவுண்டமணி, செந்திலிடம் கேட்பது போல் "இப்டியெல்லாம் பேசச்சொல்லி எவன்டா உனக்கு சொல்லித் தர்றான்" என்று கேட்கத் தோன்றுகிறது.

நம் முதல் காதலை எப்போதும் மறக்கமுடியாது என்கிறோம் நாம். ஆனால் வாழ்நாள் முழுக்க அந்த முதல்காதலையே ஒருவன் நினைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் என்று 96 படத்தின் இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். அதை அவர் கதையாக எழுதியிருக்கிறார். அந்தக்கதையை படமாக எடுத்திருக்கிறார்.
தொலைந்த அல்லது தொலைத்த நமது காதலையெல்லாம் நம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றிபெற்றிருக்கிறார். ஜானுவுக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். 22 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும். அப்போதுவரை, ராம் வேறுயாரையும் காதலிக்காமல், குறிப்பாக கன்னித்தன்மை கழியாமல் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். இதில் சேதுவும் த்ரிஷாவும் நடிக்க வேண்டுமென்றும் அவர்தான் விரும்பியிருக்கிறார்.
பசங்க 2 திரைப்படத்தில் "இது என்னோட கதை மிஸ். இதுல யாரு என்ன பண்ணணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்" என்று ஒரு குழந்தை சொல்லுமே ஞாபகமிருக்கிறதா?!!
அதேபோல் இது இயக்குனரின் கதை. இதில் யார் என்ன செய்ய வேண்டுமென்று அவர்தான் முடிவு செய்வார். நாம் விரும்பினால் பார்க்கலாம். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் என்கிற பெயரில்,  நீங்களாக ஒன்றை அபத்தமாக அனுமானித்துக்கொண்டு, உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டும் முயற்சியில் நான் மேலே சொன்னபடியெல்லாம் யோசித்து எழுதுவது பெரும் அபத்தம்.

பிரான்சில் உலகத்தரமான திரைப்படங்கள் வந்ததன் பின்னணி தெரியுமா?!! 
இப்படி விமர்சிக்கிறீர்களே,,, உங்களால் ஒரு நல்ல திரைப்படம் எடுக்க முடியுமா என்று அங்கிருந்த இயக்குனர்கள் கேட்டதும், அந்த விமர்சகர்கள் களமிறங்கி எடுத்த திரைப்படங்கள்தான்  உலக சினிமா அரங்கில் பிரெஞ்சு திரைப்படங்களுக்கு தனிமரியாதையை உருவாக்கித்தந்தது.
முகநூல் விமர்சகர்களே!! இப்படியொரு கேள்வியை நம் இயக்குனர்கள் உங்களைப் பார்த்துக்கேட்டால் என்ன செய்வீர்கள்?!! மூடிக்கொண்டு இருக்கவேண்டி வருமல்லவா?!!
அதனால படத்தை ரொம்ப ஆராயாதீங்க... நீங்க அறிவாளிங்கதான்னு நாங்க ஒத்துக்குறோம்!! முடிஞ்சா கொஞ்சம் அனுபவிங்க!!
நீங்கள் அனுபவிக்கவில்லை என்றாலும் குறையொன்றுமில்லை. படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஷன்.வி