முதல் அதிகாரம் - 1



இடம் : சென்னை மெரினா கடற்கரை. நேரம் : இரவு 10 மணி.
கடல் அலையை ஒட்டி கரை ஒதுக்கப்பட்டிருந்த சிறிய படகில் சாய்ந்தவாறு முழுக்க நனைந்தபடி அமர்ந்திருக்கிறேன். இரவு 10 மணிக்கு இங்கு ஏன் அமர்ந்திருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? என் கையில் இருக்கும் சூட்கேஸை பார்த்தபடி நானும் அதையேதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் . சூட்கேஸ் என்றவுடன், துணிமணிகள் வைக்கும் சூட்கேஸ் என்று நினைத்துவிடாதீர்கள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் ஹீரோ விஷ்ணுவுக்கு கிடைக்குமே? அந்த சூட்கேஸ்.

நான் கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’. ஆக, ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோஃபர் நோலன் படத்தில் வரும் சூட்கேஸை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நீங்கள் பார்த்திருந்தால் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், எனது கையில் இருக்கும் வஸ்துவின் பெயர் டைம் மெஷின்(TIME MACHINE) என்று.

என்ன... நம்ப மாட்டீர்களா? சந்தேகப்படாதீர்கள்... நம்புங்கள். நம்பிக்கை.. அதானே எல்லாம் !!

மெரினா கடற்கரைக்கு, சென்னைக்கு வந்த புதிதில் வேலையின்மை காரணமாக அடிக்கடி வரும் பழக்கம் இருந்தது. அதற்குப் பின் கிடைத்த வேலைகளும், வேலைப்பளுவும் இப்போது அந்தப் பழக்கத்தை குறைத்துவிட்டிருக்கிறது. ஏனோ, இன்று அலுவலகம் முடிந்தவுடன் கடற்கரைக்குச் செல்ல வேண்டுமென்று மனம் சொன்னது. திடீரென மனதில் தோன்றும் எண்ணங்கள் சில நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். இது அதுபோல் ஒரு எண்ணமாக இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. வேலையை முடித்துவிட்டு சரியாக எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்தேன். வழக்கம்போல் கடல் அலையில் கால்களை நனைத்தபடி நடந்துகொண்டிருந்தேன். கடல் நீரும், மணலும் மோதிக்கொண்டிருந்த கால்களில், மண்ணில் பாதி புதைந்தபடி கிடந்த இந்த சூட்கேஸ் தட்டுப்பட, குனிந்து அதைக் கையில் எடுத்தால், கலர் கலராக பட்டன்களோடு மின்னிக்கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். யோசித்து என்ன செய்ய? என்னவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் என்று, அப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த படகில் சென்று அமர்ந்துகொண்டேன். பெட்டியில் இருந்த நீல நிற பட்டனின் கீழ் ‘ஆடியோ’ என்று எழுதியிருக்க இது ஏதோ புதிய சங்கதிபோல் இருக்கிறது என்று நினைத்தாவாறே ஆர்வத்துடன் அந்தப் பொத்தானை அழுத்தினேன்.

‘தமிழில் தகவலைத் தொடர அருகிலிருக்கும் வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தவும். ஆங்கிலத்தில் தகவலைத் தொடர...’

வாழ்க தமிழ்! தமிழ்ப்பற்று எழுச்சிகொள்ள, வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தினேன்.

கமல்ஹாசன் குரலைப்போல ஒரு கம்பீரமான குரல் பேசத்தொடங்கியது. வாய்ஸ் ஓவரில் ஆண் குரல் கேட்பதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

‘இதுதான் டைம் மெஷின் என்கிற கால இயந்திரம். இதில் இருக்கும் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினால், இது நாற்காலியாக விரியும். பின் அதில் நீங்கள் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருக்கும் திரையில் நீங்கள் போக விரும்பும் இடம், தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டால், உங்களை அந்த இடத்துக்கே, நீங்கள் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் கொண்டு நிறுத்தும். அங்கே சென்றபின், நீங்கள் நாற்காலியிலிருந்து இறங்கினால், மெஷின் சுருங்கி, சூட்கேஸாக மாறிவிடும். நீங்கள் விரும்பினால் அங்கேயே தங்கி, அந்தச் சூழலில், அங்கு வாழும் மனிதர்களுடன் வாழலாம். மீண்டும் பழைய இடத்துக்கே வர விரும்பினால், பச்சை நிறப் பொத்தானை அழுத்தி, நாற்காலியில் அமர்ந்து, அங்கே இருக்கும் சிவப்பு நிறப்பொத்தானை அழுத்தினால், அடுத்த ஐந்து நொடிகளில் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுவீர்கள். நன்றி. தகவலை மீண்டும் கேட்க, வெள்ளை நிறப் பொத்தானை மீண்டும் அழுத்தவும்.’

திரும்பவும் அழுத்தி மீண்டுமொருமுறை தகவலைக் கேட்டு முடித்தேன். கையில் கிடைத்திருக்கும் கால இயந்திரத்தில் ஏறி கடந்த காலங்களில் நாம் பயணம் செய்யலாம் என்பது இப்போது தெளிவாகப் புரிந்தது. நம்பி இதில் பயணம் செய்யலாமா என சில நிமிடங்கள் யோசித்தேன்.

இயல்பாகவே எனக்கிருக்கும் அகழ்வாராய்ச்சி குணமும், பழங்கால வாழ்க்கை மீதான மோகமும், சில பல வருடங்கள் முன்னால் சென்று அன்றைய நாட்கள் எப்படி இருந்தது எனப் பார்த்துவிட்டு வரலாம் என்று என்னைத் தூண்டியது. விதியா, மதியா என்று தெரியவில்லை என்னைப் பச்சை நிறப் பொத்தானை அழுத்த வைத்தது. பொத்தானை அழுத்தியவுடன் மெஷின் மெதுவாக விரிந்து நாற்காலியாக மாறும் அழகை பார்த்துக்கொண்டே நின்றேன். நல்லவேளையாக இருளில் அங்கு நடப்பதை யாரும் கவனிக்கவில்லை. மெதுவாக நாற்காலியின் மேல் ஏறி அமர்ந்துகொண்டேன். நெஞ்சம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது.

‘ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு குதிச்சுடுறா கைப்புள்ளை’ என்று மனதில் சொல்லிக்கொண்டே மெஷினின் திரையில் மெரினா கடற்கரை என்றும், தேதியில் கி.பி. 1637 ஜனவரி 1 என்றும் தோராயமாக டைப் செய்தேன். அடுத்த ஐந்தாவது நொடி, நடுக்கடலில் நாற்காலியோடு மூழ்கிக் கொண்டிருந்தேன்.

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மேலிட, என்ன செய்யலாம் என்று ஒரு மைக்ரோ நொடி மட்டுமே யோசித்து, நாற்காலியிலிருந்து கடலில் குதித்தேன். அந்த சூழ்நிலையிலும் நாற்காலி, அழகாகச் சுருங்கி சூட்கேஸாக மாறுவதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சூட்கேஸாக மாறியபடியே மூழ்கிக்கொண்டிருந்த மெஷினை முழுவதுமாய் மாறியதும் பிடித்துக்கொண்டேன்.

நீச்சல் கற்றுத்தந்த தாத்தாவுக்கு நன்றி சொல்ல இப்போது நேரமில்லை. இருளில் கரை தெரியவில்லை. ஒரு கையில் மெஷினுடன் மிதந்துகொண்டிருந்தேன். சுற்றிலும் இருள். மருந்துக்கும் வெளிச்சம் இல்லை. பெரிதாக பயம் இல்லை.ஆனால், மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. திடீரென அங்கே கேட்ட பெரும் சத்தம் திடுக்கிட வைத்தது. இந்நேரத்தில் இங்கென்ன சத்தம் என எண்ணியபடி உற்றுப்பார்த்த என் கண்களில், நான்கைந்து பெரிய பாய்மரக்கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது. தற்போதெல்லாம் இதுபோன்ற படகுகள் இல்லை. உறுதி செய்துகொண்டேன்... கி.பி. 1637-க்கே வந்துவிட்டோம்.

உண்மையிலேயே நம் கையில் இருப்பது கால இயந்திரம்தான். எவ்வளவு நேரம் இப்படியே நீந்துவது? கரை எங்கிருக்கிறது என்று தெரிந்தால் கரையை நோக்கியாவது நீந்தலாம். யாருக்கு என்ன நல்லது செய்தேனோ தெரியவில்லை, ஒரு கனமான பெரிய பலகை மிதந்து வந்து கொண்டிருந்தது. அனுப்பியது கடவுளா? வாய்ப்பில்லை. காரணம் இது அனுப்பியதில்லை. கி.பி. 1637-ல் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் பலகைக்கு அருகில் நான் வந்து மிதந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்போது இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை என்று முடிவுசெய்து, ஒரு கையால் நீந்தி பலகை மேல் ஏறி அமர்ந்துகொண்ட பின்புதான் மூச்சு சமநிலைக்கு வர ஆரம்பித்தது. மெஷினைப் பார்த்தேன். அது என்னைப் பார்த்து வாயைப்பொத்திக்கொண்டு சிரிப்பதுபோல் தோன்றியது. கடலில் மூழ்கியும் அதில் இருக்கும் பட்டன்கள் மின்னிக்கொண்டுதான் இருந்தன. வாட்டர் ப்ரூஃப் மெஷின்போல.

இப்போது மீண்டும் அதே பெரும் சத்தம். பயம் அதிகமானது. இம்முறை கப்பல்களை கவனமாகப் பார்த்தேன். கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கவில்லை. போர்புரிந்து கொண்டிருந்தன. கி.பி. 1637-ல் அல்லவா இருக்கிறோம்? அன்றைய சூழலில் பழவேற்காட்டில் வியாபாரம் செய்துகொண்டிருந்த டச்சுக்காரர்களும், மயிலாப்பூரில் வணிகத்தலம் அமைத்திருந்த போர்த்துகீசியர்களும், வணிகத்துக்காக வங்கக்கடலையே போர்க்களமாக்கிக் கொண்டிருக்கும் காட்சிதான் அது என்பது புரிந்தது. வரலாறு தெரிந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகப் புரியும்.

போர்புரிந்து கொண்டிருந்த நான்கு கப்பல்களில் ஒன்று திடீரென நான் நின்ற திசை நோக்கித் திரும்ப, அந்த இருளில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தாலும், ஒரு நொடிகூட தாமதிக்காமல் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினேன். இம்முறை அது விரியும் அழகைப் பார்க்க மனமில்லை. நாற்காலியாக மாறிய மெஷினில் குதித்து அமர்ந்தேன். அடுத்த நொடியே சிவப்பு நிறப் பொத்தானை அழுத்தினேன். அடுத்த ஐந்தாவது நொடியிலிருந்து, நீண்ட நேரமாக, கொஞ்சம் ஈரமாக இங்கேயே அமர்ந்திருக்கிறேன்.

அதெப்படி? மெரினா கடற்கரை என்றுதானே டைப் செய்தேன். ஏன் கடலுக்குள் சென்றேன்? அப்படியானால் இப்போது கடற்கரையாக இருக்கும் பகுதி, அப்போது கடலாக நிரம்பியிருந்ததா? வருடங்கள் அதிகமாக, அதிகமாக கடல் ஊருக்குள் வருமே ஒழிய, உள்வாங்க வாய்ப்பில்லையே..? ஒருவேளை மெரினா கடற்கரைக்குப் பதிலாக, மெரினா கடல் என்று டைப்செய்து விட்டேனோ?

அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் எப்படியோ தப்பித்துவிட்டேன் அதுவே போதும். இப்போது என்ன செய்யலாம்? இந்த வஸ்துவைத் தூக்கி கடலில் வீசிவிட்டு வீட்டுக்குப் போய் விடலாமா?

ஊரில் சொந்தமாக வியாபாரம் துவங்கிய மாமா ஒருவர், அவரது மேஜையில் இருந்த, பொத்தானை அழுத்தியவுடன் திறந்து மூடும் ஒரு வகை கால்குலேட்டரை என்னிடம் காண்பித்து சிலாகித்தது நினைவிருக்கிறது. ஊருக்குச் சென்று இந்த கால இயந்திரத்தை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதற்கு முன் இதில் ஏறி வேறு எங்காவது செல்லலாமா? நீச்சல் தெரிந்ததால் கடந்த முறை தப்பிவிட்டோம். மீண்டுமொருமுறை இதில் ஏறி வேறு எங்காவது சென்று மாட்டிவிட்டால் என்ன செய்வது?

ம்... பொறுங்கள்... என்னைக் கொஞ்ச நேரம் யோசிக்கவிடுங்கள்...

ஓ.கே... நிச்சயமாக டைம் மெஷினில் ஏறுகிறோம், எங்காவது செல்கிறோம்.

சென்னை மட்டும் வேண்டாம். ரிஸ்க் அதிகம். கன்னியாகுமரிக்குப் போவோம். அங்கு நம் பூட்டன், பூட்டி யாராவது நம்ம ஜாடையில் இருக்கிறார்களா என்று பார்ப்போம். சரி, எத்தனை வருடங்களுக்கு முன் போகலாம்? 300, 400 வருடங்களுக்கு முன் போனால்தான் வெள்ளைக்காரன் பிரச்னை. அதற்கு முன், நம் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட வரலாற்றைக் கேட்டிருக்கிறோம். அதற்கும் முன்?படித்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அங்கே சென்று பார்க்கலாம். அப்படியே நம் தமிழ்ப் பண்பாட்டையும், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து வரலாம். இன்று மொத்தமாக மாறிப்போயிருக்கிற நம் பண்பாட்டின் துவக்க காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. ஆக, போகலாம் என்று முடிவு செய்தாயிற்று. போறதுதான் போகிறோம்... ஒரு 18000 வருடங்களுக்கு முன் போவோம். ஏரியா நன்றாக இருந்தால் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். இங்கு அடிக்கிற வெயிலையும் தாங்கமுடியவில்லை, பெய்யுற மழையையும் தாங்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை கால இயந்திரத்தின் பச்சை நிறப்பொத்தானை அழுத்தினேன்.. மனம் தெளிவாக இருக்கிறது. முதல் முறையாக நிதானத்தோடு கால இயந்திரத்தைப் பார்க்கிறேன். விரிந்த நாற்காலியில் ஏறி அமர்வது, சிம்மாசனத்தில் ஏறி அமர்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாட்டின் சிம்மாசனத்தைத்தான் தாரைவார்த்து விடுகிறோமே... இப்படிக் கிடைத்தால்தான் நமக்கு.

18000 வருடங்களுக்கு முன் என்றால், கி.மு. 16000 என்று டைப் செய்வோம். நாள்...அதே ஜனவரி–1. சென்ற முறை நேரத்தை டைப் செய்யாமல்விட்டிருக்கிறேன். அதனால்தான் இங்கிருந்த அதே நேரத்துக்கு அங்கு சென்று, இருளில் நடுக்கடலில் மாட்டிக்கொண்டேன். ஆக, நேரம் காலை 10 மணி. இடம், கன்னியாகுமரி.

1... 2... 3... 4... 5...

காத்திருங்கள். 18000 வருடங்களுக்கு முந்தைய கன்னியாகுமரியில் சந்திப்போம்...!

- மெஷின் பறக்கும்

No comments:

Post a Comment