ஏன் மழை பெய்வதில்லை

சென்னையில் ஏன் மழை பெய்வதில்லை என்பதற்கான காரணம் இன்றுதான் புரிந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்கிற மழையை, மழையென்று கூறுவது முறையாகாது. ஆதலால் "சென்னையில் மழை பெய்யவில்லையா" என்று நீங்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை. நடுவில் ஓர் இடைவெளி விட்டிருந்தாலும் மொத்தமாக சென்னையில் ஒன்பது வருடங்களாக வாழ்கிறேன். இதுவரை ஒருமுறைகூட மழையில் சந்தோஷமாக நனைகிற, மழையில் விளையாடுகிற, மழையில் நடனமாடுகிற குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

நான் சிறு குழந்தையாக இருந்தபோது,  கருங்கல்லும், சிமெண்டும் கலந்து போடப்படும் தெருச்சாலைகள் எங்கள் ஊரில் அறிமுகமாகவில்லை. எங்கள் வீடுகள் இருக்கும் தெருவில் அப்போது செம்மண் சாலைதான். மழை நாட்களில், வீட்டின் முன்பாக செந்நிறத்தில் ஓடும் மழைநீர் சிலபல வீடுகளைக்கடந்து AVM கால்வாயில் சென்று கலக்கும். AVM என்றால் AV மெய்யப்பச்செட்டியார் என்று நினைத்துவிடாதீர்கள். "அனந்த விக்டோரிய மார்த்தாண்டவர்மர்" என்பது அதன் விரிவாக்கம். மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட நதி. அந்த நதியையும், அதையொட்டித் தோன்றிய நாகரிகத்தையும் இன்னொருநாள் பேசலாம். இப்போது விஷயத்துக்கு வருகிறேன். அதுபோன்ற மழைநாட்களில் சித்தப்பாவோ, மாமாவோ செய்து தருகிற காகிதக்கப்பலை, பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டோ, தாத்தாவின் பிடியில் நின்றுகொண்டோ ஒரு மாலுமியின் பெருமிதத்தோடு அம்மழைநீரில் விடுவது இன்னும் என் நினைவில் ஈரமாக  இருக்கிறது. அழகாக அசைந்துசெல்லும் வெள்ளைநிறத்துக் கப்பல், சிறிதுதூரம் சென்றதும் நீரின் வேகத்தில் கவிழ்ந்துவிடும். வருந்தவேண்டியதில்லை. குழந்தைகளுக்கு கப்பல் செய்வதற்காகவே வீடுகளில் காகிதங்களை சேகரித்து வைத்திருப்பார்கள் போல! மழைநின்று, ஓடுகிற வெள்ளமும் நிற்கும்வரை கப்பல்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். எல்லா வீட்டுத்திண்ணைகளும் இதைப்போலவே காகிதக்கப்பல்களால் நிறைந்திருப்பது அழகிய மழைக்கவிதை. அந்த சித்தப்பாக்களும், மாமன்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நமக்கு அந்த ஆசீர்வாதங்கள் இல்லை. நம் வீட்டுக்குழந்தைகள் அலைபேசியுடன் அளவளாவிக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சம் வளர்ந்தபிறகு, மழைபெய்யும் நாட்களில், மழையில் மட்டுமே குளிப்பது எங்களின் வழக்கம். மாடி வீடுகளின் மொட்டைமாடியில் தேங்கும் நீரை பூமிக்கு அனுப்பும் குழாய்களின் கீழே நின்று குளிப்பது வரம். வானிலிருந்து பூமிக்கு வந்த மன்னாவுக்கு எந்த வகையிலும் இந்த மழைநீர் குறைந்ததல்ல. தெருவில் எந்த மாடிவீட்டுக்குழாய் பூமிக்கு அதிகநீரைக் கொண்டுவரும் என்பது தெரிந்து, அதன்கீழ் நின்று குளிப்பதற்கு வாண்டுகளாகிய நாங்கள் போடும் சண்டைகளின் முன்பு, கார்ட்டூன் தொலைக்காட்சிகள் பிச்சையெடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வீடுவரும்போது பெய்கிற அந்திமழையில் முழுதாய் நனைந்தபடி வீட்டுக்கு வரும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. மழை பெய்கிறதென்பதற்காக அலுவலகத்தைவிட்டு கிளம்பாமல் இதுவரை இருந்ததில்லை. "காய்ச்சல் வந்தா என்ன செய்றது" என்று மூன்று தசாப்தங்களாக என் அம்மா சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஒருமுறைகூட மழையில் நனைந்து காய்ச்சல் எனக்கு வந்ததில்லை.  என்னையும், மழையைக்கண்டு ஓடும்போது நனைந்தவர்களையும் தரம்பிரிக்க மழைக்குத்தெரியும். காய்ச்சலை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியை மட்டும் எனக்குத்தருகிறது.

சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருந்த மழைநாட்களில் எங்கள்வீட்டு மொட்டைமாடி திருவிழாவாக மாறும். மாடியில் நம் இடுப்பளவு நிற்கும் தூண்களில் ஏறிநின்றுகொண்டு "தகிடததிமி, தகிடததிமி, தந்தானா" என்று பாடிக்கொண்டே பரதநாட்டியம் ஆடுவோம். பக்கத்துவீட்டு ஆளில்லா மொட்டைமாடிகளை நனைக்கும் மழைத்துளிகளைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கும். சாளரங்கள் வழியாக எங்களின் கூத்துகளைப் பார்க்கும் குழந்தைகள் அதனினும் பாவம். மழை, காலங்காலமாக குழந்தைகளைத் தீண்டவே பூமிக்கு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?!! ஆம். காரணம், உங்களைப்போல் அசிங்கமாக மழை பெய்தவுடன் கைகளைக்கொண்டு தங்கள் தலையை அவர்கள் மறைப்பதில்லை. பதிலாக, அண்ணாந்து பார்த்து மழைத்துளிகளை தங்கள் முகங்களில் ஏந்திக்கொள்கின்றனர். மழையின் குரலுக்கான செவிகள் அவர்களிடம் மட்டுமே இருக்கின்றன. மழையின் மொழி அவர்களுக்கு மட்டுமே புரியும். ஏன் குழந்தைகளை பூட்டி வைக்கிறீர்கள்? அவர்களை மழையில் நனையவிடுங்கள். குழந்தைகளைப் பூட்டிவைத்துவிட்டு, இப்போதெல்லாம் மழை சரிவர பொழியவில்லையென வருந்தி பயனில்லை. "குழந்தைகள் நனையாத ஊருக்கு மழை வராமல்போகும் சாத்தியங்களும் உண்டாம்!" நான் சொல்லவில்லை. இப்போதுதான் படித்தேன். வண்ணதாசன் சொல்கிறார்!!

ஏன் சென்னையில் மழை பெய்வதில்லை என்று என்னைப்போல், இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கலாம்!! இனிமேலாவது இயன்றவரை உங்கள் குழந்தைகளை மழையில் நனைய அனுமதியுங்கள். இறுதிக்காலங்களில் தங்கள் பேரக்குழந்தைகளை மடியிலமர்த்திச் சொல்வதற்கு கதையற்றவர்களாக உங்கள் குழந்தைகளை மாற்றிவிடாதீர்கள். மழைக்கதைகள் எப்போதும் கேட்கப்படும். இப்போது நான் சொன்ன கதையை நீங்கள் படித்துமுடித்திருப்பதே அதற்கான சாட்சி!!

-விஷன்.வி

No comments:

Post a Comment