பெண் பிசாசாக இருக்கலாம்

மாலையிலிருந்து விட்டுவிட்டு விழுந்து கொண்டிருந்த தூறல் இப்போது சுத்தமாக நின்றுவிட்டிருக்கிறது. அறையில் தனியே படுத்திருக்கிறேன். நள்ளிரவில் வீட்டினுள் குதிக்கும் பூனையின் தொந்தரவால் இப்போதெல்லாம் சாளரத்தை மூடிவிடுகிறேன். மணி இப்போது சரியாக இரண்டைக் கடக்கிறது. யாரோ ஒரு பெண் வீட்டிற்கு வெளியே என் அறையின் சாளரத்தையொட்டி நடந்து கொண்டிருக்கிறார். என் தலைக்கு மேல் புயலெனச் சுழலும் மின்விசிறியின் சத்தத்தையும் மீறி அந்தப் பெண் நடப்பது எனக்கு கேட்கிறது. அதற்கு அவர் அணிந்திருக்கிற மணிகள் நிரம்பிய கொலுசுகள் காரணம்!!
ச்சல்.. ச்சல்.. ச்சல்....
ஏதேனும் பெண் பிசாசாக இருக்கலாம். நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் பிசாசுகளை முழுதாகப் புறக்கணிக்க முடியவில்லை.
"வெள்ளிக்கொலுசு மணி..
வேலான கண்ணுமணி..
சொல்லி அழைச்சதென்ன..
தூங்காம செஞ்சதென்ன.."
வழக்கம்போல் காலநேரம் தெரியாமல் ராஜா வாசிக்கிறார். மனதிற்குள் இந்தப்பாடலை பாடிக் கொண்டிருக்கிறேன். நினைவுகள் சிலபல வருடங்களுக்கு முன்பு செல்வதை தடுக்க முடியவில்லை.
கொச்சியில் ஒரு நிறுவனத்தில் பணி கிடைத்திருந்தது. கொச்சியில் அலுவலகம் இருக்கும் இடத்தைக் கேட்டுவிட்டு, பக்கத்திலேயே பெண்கள் கல்லூரி ஒன்று இருக்கிறது. Go & Enjoy எனச்சொல்லி சீனியர் ஒருவர் அனுப்பி வைத்தார். அவர் சொன்னதுபோல் அக்கல்லூரியும் இருந்தது. ஆனால் நான் தங்குவதற்காக அவர்கள் கொடுத்த வீடு, அழகிய அந்த நகரத்தைவிட்டு தூரமாக இருந்தது. ஒரு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பேருந்தில் அமர்ந்திருக்க வேண்டிய அவஸ்தை.
மிகப்பெரிய வீடு. வீட்டின் காம்பவுண்டுக்கும் வீட்டு வாசலுக்கும் முன்னூறு மீட்டர் தூரமாவது இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அருகில் வீடுகள் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு வீடு தெரிந்தது. வீட்டினுள் படுக்கையறை மட்டும் ஏழு. பெரிதுபெரிதாக திண்ணை, வரவேற்பறை, சமையலறை வேறு. குடும்பமாக வாழ்ந்தால் சொர்க்கம்தான். நானோ தன்னந்தனியனாக இரவு ஒன்பது மணிக்குமேல் வீட்டினுள் நுழைவேன். ஒரு பேய் பங்களாவுக்குள் நுழைவதுபோல் இருக்கும். படுக்கையில் விழுந்தால் வீட்டைச்சுற்றிலுமிருந்து விதவிதமான ஒலிகள். சிலநேரம் வீட்டினுள்ளும் கேட்கும். இடையிடையே கேட்கும் கொலுசுச்சத்தத்தில் பயத்தின் உச்சம் செல்வேன்!! சந்தேகமே இல்லை. பேய் பங்களாவேதான்!! "நம்ம டெட்பாடிதான் ஊருக்குப் போகும்போல" என மனது சொல்லும்.
ஒருவாரம் இப்படியே பயத்தில் கழிந்தது. பயத்திற்கு கொஞ்சம் பழகிப்போயிருந்த இரண்டாவது வாரத்தின் ஒரு நள்ளிரவில், ஏனோ எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அன்றுதான் முதல்முறையாக நிம்மதியாக உறங்க ஆரம்பித்திருந்தேன். சட்டெனத் துவங்கியது கொலுசுச்சத்தம். தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன். வேறு எந்தச் சத்தமும் கேட்காததால் அந்தக் கொலுசுச்சத்தம் மிகத்தெளிவாக கேட்டது. சந்தேகமே இல்லை. யாரோ வீட்டைச்சுற்றி நடக்கிறார்கள். அந்தச் சத்தம் பயணிக்கும் திசையை வைத்து என்னால் எளிதாக அதை ஊகிக்க முடிந்தது. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி யோசிக்கத் துவங்கினேன். "வீரம்னா என்னன்னு தெரியுமா?! பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்" தலைவன் சொன்னது உண்மை!! பயம் இல்லாதவன்போல் என்னை
நானே நினைத்துக்கொண்டு, படுக்கையிலிருந்து எழுந்து சிலபல அறைகளைக் கடந்து, தலைவாசலைத் திறந்தேன். நல்லவேளை வாசலில் யாருமில்லை. வாசற்படியில் அமர்ந்து கொண்டேன். இப்பொழுது அந்த கொலுசுச்சத்தம் வீட்டின் பின்புற இடது மூலையிலிருந்து முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. நீளமான வீடு.
அவள் நடந்துவந்து சேர ஒன்றிரண்டு நிமிடங்களாவது பிடிக்கும். எழுந்து உள்ளே ஓடிவிடலாமா என யோசித்தேன். கமல்ஹாசனின் குரல் மீண்டும் உள்ளுக்குள் கேட்டது. "வீரம்னா என்னன்னு தெரியுமா?!"
"பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்" நான் பதில் சொல்லிக்கொண்டேன். ஆண்கள் கொலுசுகள் அணிவதில்லை. வருவது யாரோ ஒரு அவள்தான். சத்தம் நெருங்கிவிட்டது. இப்போது கமலின் குரல் கேட்கவில்லை. பயத்தில் நடுங்கத்தொடங்கினேன். சத்தம் வலதுபக்கமாக என்னை நோக்கித்திரும்பியது. மெதுவாக கண்களைத் திருப்பினேன்.
..
...
யாரும் இல்லை. ஆனால் சத்தம் வந்து கொண்டிருந்தது. இப்போது அந்தச்சத்தம் எனக்கு நேரெதிரே ஒலித்துக் கொண்டிருந்தது. பின் அப்படியே அந்தச் சத்தம் தரையிலிருந்து மேலெழும்பத் தொடங்கியது. என்ன நடக்கிறதென்று புரியவில்லை. பயந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் உயரமாக எழும்பியது. வீட்டின் முன்பு நிற்கும் மரத்தின் அளவு உயர்ந்தது. பின்னர் மெதுவாக அந்தச்சத்தம் அம்மரத்தின் ஒரு கிளையில் சென்று அமர்ந்து கொண்டது. அப்போதும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் இப்போது கொஞ்சமும் பயமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பூச்சிகளும் கொலுசுகள் அணியும் என்பதை நான் அப்போதுவரை அறிந்திருக்கவில்லை!!
மணி இப்போது சரியாக மூன்றைக் கடக்கிறது. மழை பெய்யத்துவங்கி விட்டது. என் அறைக்கு வெளியே இப்போது கொலுசுச்சத்தம் கேட்கவில்லை. ஏதோ ஒரு மரத்தின், ஏதோ ஒரு கிளையில் அச்சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.
விஷன்.வி

No comments:

Post a Comment