முதல் அதிகாரம் - 2

18000 வருடங்களுக்கு முன்பிருந்த கன்னியாகுமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, காலஇயந்திரத்தில் ஏறி, வருடம், நாள், நேரம், இடம் என அத்தனையும் டைப் செய்துவிட்டு, அடுத்த ஆறாவது நொடியில் என்ன நடக்குமோ என்கிற ஆச்சரியத்திலும், பயத்திலும் கண்களை மூடிக்கொண்டேன்.

1.. 2.. 3.. 4.. 5..

ஐந்து நொடிகள் கடந்து விட்டன. இப்போது  நான் 18000 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்க வேண்டும். இத்தனை வருடங்கள் முன்பு செல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே நடுக்கடலில் மாட்டிக்கொண்டோம். இம்முறை எந்த இடத்தில் சென்று மாட்டிக்கொள்ளப்போகிறோமோ என்ற பயம் மட்டும் இருந்தது. இம்முறை கடலில் மூழ்கும் உணர்வு எதுவும் இல்லை. உண்மையாகவே 18000 வருடங்களுக்கு முன்பு வந்துவிட்டோமா அல்லது இன்னும் சென்னையில்தான் இருக்கிறோமா?? கண்களைத் திறக்காமலேயே யோசித்தேன். கண்டிப்பாக சென்னை இல்லை. மலர்களின் வாசமும், மழைவிழுந்த ஈரமண்ணின் வாசமும் ஒருசேர வீசுவதை என்னால் நுகரமுடிகிறது. மிதவேகத்தில் அடிக்கிறக் காற்று, வாசனையோடு என்னைக் கடப்பதை கண்களைத் திறக்காமலேயே உணர்கிறேன். இது சென்னையில் நிகழ சாத்தியமில்லை.

திரைப்படங்களில் வெற்றிகரமாக கண் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபின், கண்களில் கட்டியிருக்கும் வெள்ளைத்துணியை பூப்போல மருத்துவர் அவிழ்த்ததும், மொட்டு மலர்வதைவிட  மென்மையாக கண்களைத் திறக்கும் கதாநாயகியைப்போல, என் கண்களைத் திறந்தேன். வெகுநேரம் தியானத்தில் இருந்துவிட்டு கண்களைத் திறக்கும் புத்தபிக்குவைப்போல என்றும் இதனைச் சொல்லலாம்.

உண்மைதான். நான் சென்னையில் இல்லை. தார்ச்சாலைக்குப் பதிலாக, மிக இறுக்கமாக போடப்பட்ட நீளமான செம்மண் சாலை. அப்போதுதான் லேசான மழைபொழிந்து நின்றிருக்கிறது என்பதை அந்த செம்மண்ணின் ஈரமும், வாசமும் சொல்கிறது. சாலையின் இரு ஓரங்களிலும் சீரான இடைவெளிவிட்டு வளர்ந்து நிற்கிற மிகப்பெரிய மரங்கள். பார்ப்பதற்கு அவை, நம்மூர் கிராமங்களில் நிற்கும் அரசமரங்களைப்போல இருக்கிறது. நீள்வட்டத்தில் இருக்கும் ஆரஞ்சுநிற இலைகள் அந்த மரத்தின் அழகையும், சாலையின் அழகையும் கூடுதல் அழகாக்குகிறது. சாலையின் இரண்டு பக்கங்களும், மிகப்பெரிய மணற்பரப்பும், ஆங்காங்கே மரங்களுமாக பரந்துவிரிந்திருந்திருக்கிற நிலம், அடர்த்தி குறைந்த வனம்போல காட்சியளித்தது. எனக்கு நேர்எதிரே நிற்கும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த குயிலைப்போன்ற  ஒரு பறவை, என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் அலகு மட்டும் கிளியின் அலகைப்போல சிவந்த நிறத்தில் இருக்கிறது. சட்டென்று தன் அலகைத்திறந்து ஏதோசொல்லிவிட்டு உயரமாகப் பறந்தது. யாருக்கு சேதிசொல்ல பறக்கிறது என்று  தெரியவில்லை. இப்போது நான் ஆளரவமற்ற மதியநேரத்து தேசியநெடுஞ்சாலையில் தனியே நிற்பதுபோல் நின்றுகொண்டிருந்தேன். மன்னிக்கவும் காலஇயந்திரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். தனிமை எப்போதும் நம்மை யோசிக்க வைக்கும். யோசிக்கத்தொடங்கினேன். கன்னியகுமரிக்குத்தானே வந்தோம். இங்கே அதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லையே?! திருவள்ளுவர் சிலை இல்லை. விவேகானந்தர் பாறை இல்லை. ஐயோ!! கடல் எங்கே? குமரி என்றாலே கடல்தானே?! கடலே இல்லாதபோது எங்கிருந்து விவேகானந்தரும், திருவள்ளுவரும்?! இந்தக் காலஇயந்திரம் கன்னியகுமாரிக்குப் பதிலாக வேறு ஊரில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டதா? ஏன் ஊர்மாற்றி இறக்கிவிட்டாய் என்று சட்டையைப்பிடித்துக் கேட்பதற்கு நடத்துனர் யாரும் இந்த வாகனத்துக்கு இல்லையே?! என்ன செய்வது?! சிவப்பு பொத்தானை அழுத்தி மீண்டும் சென்னைக்கே சென்று விடலாமா? முதலில் கீழே இறங்குவோம். நம்மூரைப்போல லிஃப்ட் கொடுத்து உதவுவதற்கு யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கலாம். கீழே இறங்கினேன்.

இந்த இயந்திரம் அழகாக மடங்கி, பின் சுருங்கி, ஒரு சூட்கேஸைப்போல மாறும் அழகுக்கே இதைக்கண்டுபிடித்த கைக்கு ஒரு வைரமோதிரம் பரிசளிக்க வேண்டும். வேண்டாம். அவ்வளவு வசதியில்லை. தங்கமோதிரம் போதும். சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்தச்சாலை சிறிய வளைவுநெளிவுகளுடன் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியே இந்தச் சாலையோரமாக நடந்தால் ஏதேனும் ஊர் வரலாம். நடக்கத்தொடங்கினேன். இங்கே நடப்பதில் எந்தக்கடினமும் இல்லை. வெயில் இல்லை. புழுதி இல்லை. இரைச்சல் இல்லை. செம்மண் சாலைதான் என்றாலும் மேடுபள்ளங்கள் எதுவும் இல்லை. தனியே நடக்கிறோம் என்கிற வருத்தத்தைத்தவிர வேறு எதுவுமே இல்லை. கூடநடப்பதற்கு யாரேனும் இருந்தால், எத்தனை மைல்கள் வேண்டுமானாலும் இந்தச்சாலையில் நடக்கலாம். அரைமணி நேரமாக நடக்கிறேன். இதுவரை ஒருமனிதரைக்கூட பார்க்க முடியவில்லை.

டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..

தூரத்திலிருந்து ஒரு குதிரை வந்துகொண்டிருக்கும் சத்தம். "நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா" பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் அதே குதிரை ஓடும் சத்தம். பயத்தோடும், ஆச்சரியத்தோடும் மெதுவாகத் திரும்பிப்பார்த்தேன். மீண்டும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் குதிரையில் வந்து கொண்டிருந்தார். 18000 வருடங்களுக்கு முன்னால் எப்படி எம்.ஜி.ஆர்?? ஆனால் குதிரையில் வருபவர் கொஞ்சம் கருப்பாக இருந்தது சந்தேகத்தை வரவழைத்தது. குதிரை இப்போது என்னை நெருங்கிவிட்டது. குதிரையில் யார் வந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் வருவதுபோலவேத் தோன்றுவது வேடிக்கை. இது யாரோ நம்பியார்போல் இருக்கிறது. முறைத்துக்கொண்டே  வருகிறான். உடம்போடு ஒட்டியிருக்கும் நீளமான சிவப்பு அங்கியை அணிந்திருக்கிறான். தையல்காரரிடம், உடை, உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்ச்சியாக இருக்காது என்று சொல்லி தைத்திருப்பான் போல. அத்தனை இறுக்கமாக இருந்தது அந்த அங்கி. இளஞ்சிவப்பு நிறத்தில் கால்சட்டை. கொஞ்சம் சுகவாசிபோல் தெரிகிறது. கால்சட்டை காற்றுப்புகும் அளவிற்கு தளர்வாக இருந்தது. சல்வார் கமீஸ்போல,  கால் மாணிக்கட்டுக்கு கீழே மட்டும் இறுக்கமாக இருந்தது. தோலில் செய்த ஒரு கச்சை, இடுப்பை அலங்கரித்துக்கொண்டிருந்தது. இடுப்பின் இடதுபுறத்தில் ஒரு நீளமான வாளும், ஒரு குறுவாளும் தொங்கிக்கொண்டிருந்தன. பொன்னிறத்தில் வாள்களின் கைப்பிடிகள் மட்டும் வாள் உறைகளின் மேலே தெரிந்தது. வலதுபக்கம் அடிப்பாகம் நன்றாக வளைந்திருக்கும் சற்றுநீளமான  குறுவாள் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கைப்பிடி எதுவும் மேலே தெரியவில்லை. பார்ப்பதற்கு நம்மூர் காவல்துறை அதிகாரிகளின் மூடியிருக்கும் துப்பாக்கி உறையைப்போல இருக்கிறது. இரண்டடி நீளமான தலைமுடியை, பெண்களின் ஒற்றை ஜடையைப்போல பின்னியிருந்தான். இரண்டுவார தாடி, மீசையை அழகாக செதுக்கி ஒதுக்கியிருந்தான். ஏதோவொரு சவரக்காரரின் கைவண்ணமாக இருக்கலாம்.  அதிகபட்சம் இவனுக்கு முப்பது வயதிருக்கலாம். இளநரை எதுவும் இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறது போலிருக்கிறது.  பெரிய விழிகள். கூர்மையான பார்வை. சுருங்கச்சொல்ல வேண்டுமென்றால் நாம் இலக்கியங்களில் படித்த போர்வீரனின் தோற்றத்தில் இருந்தான்.       
நான் அவனைப் பார்ப்பதுபோலவே அவனும் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். என்னைவிட கூர்மையாக, ஒரு வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான். பேசத்தொடங்கினான்.

"யாரப்பா நீ? உன் தோற்றமே நகைச்சுவையாக இருக்கிறதே? ஏன் உன் முகத்தின் நிறம் இப்படி வெளிறிப்போய் இருக்கிறது? கேசத்தை ஏன் வெட்டியிருக்கிறாய்?" 

ஒரேநேரத்தில் இத்தனை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். அவன் கறுப்பாக இருந்துகொண்டு, என்னைப்பார்த்து ஏன் உன் முகம் வெளிறிப்போய் இருக்கிறது என்று கேட்கிறானே? அவனுக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்துக்கு நடுவிலும், அவன் பேசுகிற அழகான தமிழ் மகிழ்ச்சியைத் தருகிறது.

"ஏன் எதுவும் கதைக்காமல் இருக்கிறாய்? வாய்பேச இயலாதா? எங்கேயிருந்து வருகிறாய் நீ?"

" அதெல்லாம் நல்லாவே பேசுவேன் சார். சென்னைலேந்து வர்றேன் "

" என்ன உளறுகிறாய்? நீ பேசுகிற மொழியே புரியவில்லையே? வேற்று நாட்டிலிருந்து வந்திருக்கிறாய் என்பது மட்டும் புரிகிறது. எங்கள் நாட்டை வேவுபார்க்க வந்தாயா?" கோபமாக முறைத்தான்.

பழக்கதோஷத்தில் இங்கே பேசுவதுபோல் பேசிவிட்டேன். முடிந்தவரை நல்ல தமிழில் பேசிவிட வேண்டியதுதான். "வேவு பார்க்க வரவில்லை வீரனே! தூரதேசத்திலிருந்து வருகிறேன். நமது நாட்டைச்சுற்றிப்பார்க்கவே வந்தேன்." என் தமிழைக்கேட்ட, அவனது முகம் கொஞ்சம் மலர்ந்தது. நான் படித்த தமிழ்வழிக்கல்வியும், புத்தகங்களும் இப்போது கைகொடுத்திருக்கிறது.

முகம் மலர்ந்தாலும், அவன் சந்தேகம் தீரவில்லை என்பது மட்டும் அவனது கண்களில் தெளிவாகத் தெரிந்தது.

"உண்பதற்கு வழியில்லாத தேசத்திலிருந்தா வருகிறாய்? என் இப்படி மிதியடியில் கால்சட்டை தைத்து அணிந்திருக்கிறாய்?"   

ஜீன்ஸை இதைவிட கேவலமாக கலாய்க்க யாராலும் முடியாது. பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

"உன் தோற்றமும், ஆடையும், தலையோடு ஒட்டிய கேசமும் ஏதோ பட்டினி தேசத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதைச்சொல்கிறது" அவனது கண்களில் கேலி தெரிந்தது.

என் கையில் இருக்கும் காலஇயந்திரத்தை உற்றுப்பார்த்தான். "உன் கையில் இருப்பது என்ன? எங்கள் நாட்டின் கைதிகளுக்கு உணவளிக்கும் தட்டின் நிறத்தில் இருக்கிறதே?

மீண்டும் கேலி பேசுகிறான்.

எனக்கு கோவம் வந்துவிட்டது. "யோவ்... சும்மா ஓவரா பேசாத.. சாப்பாட்டுக்கு வழியில்லாம ஒண்ணும் போயிடல. நீ உன் வேலையைப் பாத்துட்டுட்டு போயா யோவ்" அவனுக்கு பாஷை புரியாது என்கிற தைரியத்தில்தான் பேசினேன்.

என் மொழியைக்கேட்டு ஆச்சரியத்தில் கண்களைச்சுருக்கி மீண்டும் சகஜ நிலைக்கு வந்தான்.

"இதுதான் உன் பட்டினி தேசத்தின் மொழியா ? உன் ஆடையைப்போலவே உன் மொழியும் வறுமையாக இருக்கிறது"

சங்கம் வளர்த்த உலகத்தின் மூத்தமொழி, இந்த பதினெட்டாயிர வருடத்தில்  வளர்ந்து, பல வடிவங்களைக் கடந்து , பின் உருமாறி, இன்று  அவன் பார்வையில் தளர்ந்து நிற்கிறதுபோல. அதனால்தான்  உன் மொழி வறுமையாக இருக்கிறது என்கிறான்.

இம்முறை குற்றவுணர்ச்சியினால் அமைதியாக நின்றேன்.

"மூடனே. புரவியில் ஏறு"

அவன் மூடன் என்றதும் என் குற்றவுணர்ச்சி மறைந்து , கோபம் அதிகமாகி விட்டது. அரசியல் விஞ்ஞானிகள் இருக்கும் ஊரிலிருந்து வந்திருக்கும் என்னைப்பார்த்து மூடன் என்று சொன்னால் கோபம் வராதா என்ன? "யோவ்.. நீ இதே மாதிரி பேசிட்டு இருந்தேன்னு வச்சுக்கோயேன்..இந்த மெஷின்ல தூக்கிப்போட்டு எங்க ஊருக்கு கொண்டு போயிடுவேன் பாத்துக்க. அப்பதான் நான் மூடனா அல்லது நீ மூடனானு தெரியும்."

மொழி புரியவில்லை என்றாலும், நான் கோபமாக இருக்கிறேன் என்பது அவனுக்கு புரிந்துவிட்டது போல.  "மூடனை, மூடன் என்றுதான் அழைக்க முடியும். வாயை மூடிக்கொண்டு புரவியில் ஏறு. அரசவைக்குச் செல்லலாம். நீ நாட்டைச்சுற்றி பார்க்க வந்தாயா? அல்லது வேவு பார்க்க வந்தாயா என்று அங்கு தெரிந்துவிடும்."

ஆஹா!! மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பது புரிந்தது. சட்டென பயம் மேலிட, கால்கள் நடுங்கத்தொடங்கியது. அரசவை என்கிறான். அங்கே சென்றால் என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்? சந்தேகத்தில் நம்மைக் கொன்றுவிட்டால் என்ன செய்ய? அநியாயமாக  இப்படி 18000 வருடங்களுக்கு முன்பு வந்தா சாகவேண்டும்?  வேறுவழியில்லை. டைம் மெஷினில் ஏறி, சிவப்பு பட்டனை அழுத்தி ஊருக்குச் சென்றுவிட வேண்டியதுதான். ஆனால் இவன் அருகில் நின்றால் அதைச்செய்ய முடியாது. அடுத்தநொடியே , சாலையைவிட்டு இறங்கி மரங்கள் நிறைந்திருக்கும் மணற்பரப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

"மூடனே நில்" என்று கத்தினான். திரும்பாமல் நடையின் வேகத்தைக்கூட்டினேன்.

"நிற்கிறாயா அல்லது வளரியை வீசவா" அவனது குரல் இம்முறை  சற்று கோபமாகக் கேட்டது.

வளரி வேறு வைத்திருக்கிறானா? இனி ஓடினாலும் பயனில்லை. மெதுவாகத் திரும்பினேன். 'வா' என்பதுபோல் தலையை அசைத்தான். பயந்தபடியே அவனைநோக்கி நடந்தேன். என் பயத்தை ரசித்தபடியே என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் சென்றதும் சட்டென்று தன் இடதுகையால் என் சட்டையைப்பிடித்து, அலேக்காகத் தூக்கி குதிரையில், அவனுக்கு முன்பாக அமரவைத்தான். "நான் என்ன ஹீரோயினாடா? உன்கூட பாட்டு பாடிட்டே குதிரையில வர்றதுக்கு" என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த பயத்திலும் ஆர்வமிகுதியால் "உன் வலதுபக்க இடுப்பில் தொங்குகின்ற உறையில் இருப்பதுதான் வளரியா?" என்றேன்..

சட்டெனப் பறந்தது குதிரை!!!

- வளரியோடு மீண்டும் வருகிறேன்.

முதல் அதிகாரம் - 1



இடம் : சென்னை மெரினா கடற்கரை. நேரம் : இரவு 10 மணி.
கடல் அலையை ஒட்டி கரை ஒதுக்கப்பட்டிருந்த சிறிய படகில் சாய்ந்தவாறு முழுக்க நனைந்தபடி அமர்ந்திருக்கிறேன். இரவு 10 மணிக்கு இங்கு ஏன் அமர்ந்திருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? என் கையில் இருக்கும் சூட்கேஸை பார்த்தபடி நானும் அதையேதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் . சூட்கேஸ் என்றவுடன், துணிமணிகள் வைக்கும் சூட்கேஸ் என்று நினைத்துவிடாதீர்கள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் ஹீரோ விஷ்ணுவுக்கு கிடைக்குமே? அந்த சூட்கேஸ்.

நான் கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’. ஆக, ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோஃபர் நோலன் படத்தில் வரும் சூட்கேஸை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நீங்கள் பார்த்திருந்தால் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், எனது கையில் இருக்கும் வஸ்துவின் பெயர் டைம் மெஷின்(TIME MACHINE) என்று.

என்ன... நம்ப மாட்டீர்களா? சந்தேகப்படாதீர்கள்... நம்புங்கள். நம்பிக்கை.. அதானே எல்லாம் !!

மெரினா கடற்கரைக்கு, சென்னைக்கு வந்த புதிதில் வேலையின்மை காரணமாக அடிக்கடி வரும் பழக்கம் இருந்தது. அதற்குப் பின் கிடைத்த வேலைகளும், வேலைப்பளுவும் இப்போது அந்தப் பழக்கத்தை குறைத்துவிட்டிருக்கிறது. ஏனோ, இன்று அலுவலகம் முடிந்தவுடன் கடற்கரைக்குச் செல்ல வேண்டுமென்று மனம் சொன்னது. திடீரென மனதில் தோன்றும் எண்ணங்கள் சில நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். இது அதுபோல் ஒரு எண்ணமாக இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. வேலையை முடித்துவிட்டு சரியாக எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்தேன். வழக்கம்போல் கடல் அலையில் கால்களை நனைத்தபடி நடந்துகொண்டிருந்தேன். கடல் நீரும், மணலும் மோதிக்கொண்டிருந்த கால்களில், மண்ணில் பாதி புதைந்தபடி கிடந்த இந்த சூட்கேஸ் தட்டுப்பட, குனிந்து அதைக் கையில் எடுத்தால், கலர் கலராக பட்டன்களோடு மின்னிக்கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். யோசித்து என்ன செய்ய? என்னவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் என்று, அப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த படகில் சென்று அமர்ந்துகொண்டேன். பெட்டியில் இருந்த நீல நிற பட்டனின் கீழ் ‘ஆடியோ’ என்று எழுதியிருக்க இது ஏதோ புதிய சங்கதிபோல் இருக்கிறது என்று நினைத்தாவாறே ஆர்வத்துடன் அந்தப் பொத்தானை அழுத்தினேன்.

‘தமிழில் தகவலைத் தொடர அருகிலிருக்கும் வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தவும். ஆங்கிலத்தில் தகவலைத் தொடர...’

வாழ்க தமிழ்! தமிழ்ப்பற்று எழுச்சிகொள்ள, வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தினேன்.

கமல்ஹாசன் குரலைப்போல ஒரு கம்பீரமான குரல் பேசத்தொடங்கியது. வாய்ஸ் ஓவரில் ஆண் குரல் கேட்பதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

‘இதுதான் டைம் மெஷின் என்கிற கால இயந்திரம். இதில் இருக்கும் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினால், இது நாற்காலியாக விரியும். பின் அதில் நீங்கள் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருக்கும் திரையில் நீங்கள் போக விரும்பும் இடம், தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டால், உங்களை அந்த இடத்துக்கே, நீங்கள் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் கொண்டு நிறுத்தும். அங்கே சென்றபின், நீங்கள் நாற்காலியிலிருந்து இறங்கினால், மெஷின் சுருங்கி, சூட்கேஸாக மாறிவிடும். நீங்கள் விரும்பினால் அங்கேயே தங்கி, அந்தச் சூழலில், அங்கு வாழும் மனிதர்களுடன் வாழலாம். மீண்டும் பழைய இடத்துக்கே வர விரும்பினால், பச்சை நிறப் பொத்தானை அழுத்தி, நாற்காலியில் அமர்ந்து, அங்கே இருக்கும் சிவப்பு நிறப்பொத்தானை அழுத்தினால், அடுத்த ஐந்து நொடிகளில் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுவீர்கள். நன்றி. தகவலை மீண்டும் கேட்க, வெள்ளை நிறப் பொத்தானை மீண்டும் அழுத்தவும்.’

திரும்பவும் அழுத்தி மீண்டுமொருமுறை தகவலைக் கேட்டு முடித்தேன். கையில் கிடைத்திருக்கும் கால இயந்திரத்தில் ஏறி கடந்த காலங்களில் நாம் பயணம் செய்யலாம் என்பது இப்போது தெளிவாகப் புரிந்தது. நம்பி இதில் பயணம் செய்யலாமா என சில நிமிடங்கள் யோசித்தேன்.

இயல்பாகவே எனக்கிருக்கும் அகழ்வாராய்ச்சி குணமும், பழங்கால வாழ்க்கை மீதான மோகமும், சில பல வருடங்கள் முன்னால் சென்று அன்றைய நாட்கள் எப்படி இருந்தது எனப் பார்த்துவிட்டு வரலாம் என்று என்னைத் தூண்டியது. விதியா, மதியா என்று தெரியவில்லை என்னைப் பச்சை நிறப் பொத்தானை அழுத்த வைத்தது. பொத்தானை அழுத்தியவுடன் மெஷின் மெதுவாக விரிந்து நாற்காலியாக மாறும் அழகை பார்த்துக்கொண்டே நின்றேன். நல்லவேளையாக இருளில் அங்கு நடப்பதை யாரும் கவனிக்கவில்லை. மெதுவாக நாற்காலியின் மேல் ஏறி அமர்ந்துகொண்டேன். நெஞ்சம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது.

‘ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு குதிச்சுடுறா கைப்புள்ளை’ என்று மனதில் சொல்லிக்கொண்டே மெஷினின் திரையில் மெரினா கடற்கரை என்றும், தேதியில் கி.பி. 1637 ஜனவரி 1 என்றும் தோராயமாக டைப் செய்தேன். அடுத்த ஐந்தாவது நொடி, நடுக்கடலில் நாற்காலியோடு மூழ்கிக் கொண்டிருந்தேன்.

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மேலிட, என்ன செய்யலாம் என்று ஒரு மைக்ரோ நொடி மட்டுமே யோசித்து, நாற்காலியிலிருந்து கடலில் குதித்தேன். அந்த சூழ்நிலையிலும் நாற்காலி, அழகாகச் சுருங்கி சூட்கேஸாக மாறுவதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சூட்கேஸாக மாறியபடியே மூழ்கிக்கொண்டிருந்த மெஷினை முழுவதுமாய் மாறியதும் பிடித்துக்கொண்டேன்.

நீச்சல் கற்றுத்தந்த தாத்தாவுக்கு நன்றி சொல்ல இப்போது நேரமில்லை. இருளில் கரை தெரியவில்லை. ஒரு கையில் மெஷினுடன் மிதந்துகொண்டிருந்தேன். சுற்றிலும் இருள். மருந்துக்கும் வெளிச்சம் இல்லை. பெரிதாக பயம் இல்லை.ஆனால், மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. திடீரென அங்கே கேட்ட பெரும் சத்தம் திடுக்கிட வைத்தது. இந்நேரத்தில் இங்கென்ன சத்தம் என எண்ணியபடி உற்றுப்பார்த்த என் கண்களில், நான்கைந்து பெரிய பாய்மரக்கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது. தற்போதெல்லாம் இதுபோன்ற படகுகள் இல்லை. உறுதி செய்துகொண்டேன்... கி.பி. 1637-க்கே வந்துவிட்டோம்.

உண்மையிலேயே நம் கையில் இருப்பது கால இயந்திரம்தான். எவ்வளவு நேரம் இப்படியே நீந்துவது? கரை எங்கிருக்கிறது என்று தெரிந்தால் கரையை நோக்கியாவது நீந்தலாம். யாருக்கு என்ன நல்லது செய்தேனோ தெரியவில்லை, ஒரு கனமான பெரிய பலகை மிதந்து வந்து கொண்டிருந்தது. அனுப்பியது கடவுளா? வாய்ப்பில்லை. காரணம் இது அனுப்பியதில்லை. கி.பி. 1637-ல் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் பலகைக்கு அருகில் நான் வந்து மிதந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்போது இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை என்று முடிவுசெய்து, ஒரு கையால் நீந்தி பலகை மேல் ஏறி அமர்ந்துகொண்ட பின்புதான் மூச்சு சமநிலைக்கு வர ஆரம்பித்தது. மெஷினைப் பார்த்தேன். அது என்னைப் பார்த்து வாயைப்பொத்திக்கொண்டு சிரிப்பதுபோல் தோன்றியது. கடலில் மூழ்கியும் அதில் இருக்கும் பட்டன்கள் மின்னிக்கொண்டுதான் இருந்தன. வாட்டர் ப்ரூஃப் மெஷின்போல.

இப்போது மீண்டும் அதே பெரும் சத்தம். பயம் அதிகமானது. இம்முறை கப்பல்களை கவனமாகப் பார்த்தேன். கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கவில்லை. போர்புரிந்து கொண்டிருந்தன. கி.பி. 1637-ல் அல்லவா இருக்கிறோம்? அன்றைய சூழலில் பழவேற்காட்டில் வியாபாரம் செய்துகொண்டிருந்த டச்சுக்காரர்களும், மயிலாப்பூரில் வணிகத்தலம் அமைத்திருந்த போர்த்துகீசியர்களும், வணிகத்துக்காக வங்கக்கடலையே போர்க்களமாக்கிக் கொண்டிருக்கும் காட்சிதான் அது என்பது புரிந்தது. வரலாறு தெரிந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகப் புரியும்.

போர்புரிந்து கொண்டிருந்த நான்கு கப்பல்களில் ஒன்று திடீரென நான் நின்ற திசை நோக்கித் திரும்ப, அந்த இருளில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தாலும், ஒரு நொடிகூட தாமதிக்காமல் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினேன். இம்முறை அது விரியும் அழகைப் பார்க்க மனமில்லை. நாற்காலியாக மாறிய மெஷினில் குதித்து அமர்ந்தேன். அடுத்த நொடியே சிவப்பு நிறப் பொத்தானை அழுத்தினேன். அடுத்த ஐந்தாவது நொடியிலிருந்து, நீண்ட நேரமாக, கொஞ்சம் ஈரமாக இங்கேயே அமர்ந்திருக்கிறேன்.

அதெப்படி? மெரினா கடற்கரை என்றுதானே டைப் செய்தேன். ஏன் கடலுக்குள் சென்றேன்? அப்படியானால் இப்போது கடற்கரையாக இருக்கும் பகுதி, அப்போது கடலாக நிரம்பியிருந்ததா? வருடங்கள் அதிகமாக, அதிகமாக கடல் ஊருக்குள் வருமே ஒழிய, உள்வாங்க வாய்ப்பில்லையே..? ஒருவேளை மெரினா கடற்கரைக்குப் பதிலாக, மெரினா கடல் என்று டைப்செய்து விட்டேனோ?

அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் எப்படியோ தப்பித்துவிட்டேன் அதுவே போதும். இப்போது என்ன செய்யலாம்? இந்த வஸ்துவைத் தூக்கி கடலில் வீசிவிட்டு வீட்டுக்குப் போய் விடலாமா?

ஊரில் சொந்தமாக வியாபாரம் துவங்கிய மாமா ஒருவர், அவரது மேஜையில் இருந்த, பொத்தானை அழுத்தியவுடன் திறந்து மூடும் ஒரு வகை கால்குலேட்டரை என்னிடம் காண்பித்து சிலாகித்தது நினைவிருக்கிறது. ஊருக்குச் சென்று இந்த கால இயந்திரத்தை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதற்கு முன் இதில் ஏறி வேறு எங்காவது செல்லலாமா? நீச்சல் தெரிந்ததால் கடந்த முறை தப்பிவிட்டோம். மீண்டுமொருமுறை இதில் ஏறி வேறு எங்காவது சென்று மாட்டிவிட்டால் என்ன செய்வது?

ம்... பொறுங்கள்... என்னைக் கொஞ்ச நேரம் யோசிக்கவிடுங்கள்...

ஓ.கே... நிச்சயமாக டைம் மெஷினில் ஏறுகிறோம், எங்காவது செல்கிறோம்.

சென்னை மட்டும் வேண்டாம். ரிஸ்க் அதிகம். கன்னியாகுமரிக்குப் போவோம். அங்கு நம் பூட்டன், பூட்டி யாராவது நம்ம ஜாடையில் இருக்கிறார்களா என்று பார்ப்போம். சரி, எத்தனை வருடங்களுக்கு முன் போகலாம்? 300, 400 வருடங்களுக்கு முன் போனால்தான் வெள்ளைக்காரன் பிரச்னை. அதற்கு முன், நம் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட வரலாற்றைக் கேட்டிருக்கிறோம். அதற்கும் முன்?படித்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அங்கே சென்று பார்க்கலாம். அப்படியே நம் தமிழ்ப் பண்பாட்டையும், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து வரலாம். இன்று மொத்தமாக மாறிப்போயிருக்கிற நம் பண்பாட்டின் துவக்க காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. ஆக, போகலாம் என்று முடிவு செய்தாயிற்று. போறதுதான் போகிறோம்... ஒரு 18000 வருடங்களுக்கு முன் போவோம். ஏரியா நன்றாக இருந்தால் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். இங்கு அடிக்கிற வெயிலையும் தாங்கமுடியவில்லை, பெய்யுற மழையையும் தாங்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை கால இயந்திரத்தின் பச்சை நிறப்பொத்தானை அழுத்தினேன்.. மனம் தெளிவாக இருக்கிறது. முதல் முறையாக நிதானத்தோடு கால இயந்திரத்தைப் பார்க்கிறேன். விரிந்த நாற்காலியில் ஏறி அமர்வது, சிம்மாசனத்தில் ஏறி அமர்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாட்டின் சிம்மாசனத்தைத்தான் தாரைவார்த்து விடுகிறோமே... இப்படிக் கிடைத்தால்தான் நமக்கு.

18000 வருடங்களுக்கு முன் என்றால், கி.மு. 16000 என்று டைப் செய்வோம். நாள்...அதே ஜனவரி–1. சென்ற முறை நேரத்தை டைப் செய்யாமல்விட்டிருக்கிறேன். அதனால்தான் இங்கிருந்த அதே நேரத்துக்கு அங்கு சென்று, இருளில் நடுக்கடலில் மாட்டிக்கொண்டேன். ஆக, நேரம் காலை 10 மணி. இடம், கன்னியாகுமரி.

1... 2... 3... 4... 5...

காத்திருங்கள். 18000 வருடங்களுக்கு முந்தைய கன்னியாகுமரியில் சந்திப்போம்...!

- மெஷின் பறக்கும்

ஏன் மழை பெய்வதில்லை

சென்னையில் ஏன் மழை பெய்வதில்லை என்பதற்கான காரணம் இன்றுதான் புரிந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்கிற மழையை, மழையென்று கூறுவது முறையாகாது. ஆதலால் "சென்னையில் மழை பெய்யவில்லையா" என்று நீங்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை. நடுவில் ஓர் இடைவெளி விட்டிருந்தாலும் மொத்தமாக சென்னையில் ஒன்பது வருடங்களாக வாழ்கிறேன். இதுவரை ஒருமுறைகூட மழையில் சந்தோஷமாக நனைகிற, மழையில் விளையாடுகிற, மழையில் நடனமாடுகிற குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

நான் சிறு குழந்தையாக இருந்தபோது,  கருங்கல்லும், சிமெண்டும் கலந்து போடப்படும் தெருச்சாலைகள் எங்கள் ஊரில் அறிமுகமாகவில்லை. எங்கள் வீடுகள் இருக்கும் தெருவில் அப்போது செம்மண் சாலைதான். மழை நாட்களில், வீட்டின் முன்பாக செந்நிறத்தில் ஓடும் மழைநீர் சிலபல வீடுகளைக்கடந்து AVM கால்வாயில் சென்று கலக்கும். AVM என்றால் AV மெய்யப்பச்செட்டியார் என்று நினைத்துவிடாதீர்கள். "அனந்த விக்டோரிய மார்த்தாண்டவர்மர்" என்பது அதன் விரிவாக்கம். மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட நதி. அந்த நதியையும், அதையொட்டித் தோன்றிய நாகரிகத்தையும் இன்னொருநாள் பேசலாம். இப்போது விஷயத்துக்கு வருகிறேன். அதுபோன்ற மழைநாட்களில் சித்தப்பாவோ, மாமாவோ செய்து தருகிற காகிதக்கப்பலை, பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டோ, தாத்தாவின் பிடியில் நின்றுகொண்டோ ஒரு மாலுமியின் பெருமிதத்தோடு அம்மழைநீரில் விடுவது இன்னும் என் நினைவில் ஈரமாக  இருக்கிறது. அழகாக அசைந்துசெல்லும் வெள்ளைநிறத்துக் கப்பல், சிறிதுதூரம் சென்றதும் நீரின் வேகத்தில் கவிழ்ந்துவிடும். வருந்தவேண்டியதில்லை. குழந்தைகளுக்கு கப்பல் செய்வதற்காகவே வீடுகளில் காகிதங்களை சேகரித்து வைத்திருப்பார்கள் போல! மழைநின்று, ஓடுகிற வெள்ளமும் நிற்கும்வரை கப்பல்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். எல்லா வீட்டுத்திண்ணைகளும் இதைப்போலவே காகிதக்கப்பல்களால் நிறைந்திருப்பது அழகிய மழைக்கவிதை. அந்த சித்தப்பாக்களும், மாமன்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நமக்கு அந்த ஆசீர்வாதங்கள் இல்லை. நம் வீட்டுக்குழந்தைகள் அலைபேசியுடன் அளவளாவிக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சம் வளர்ந்தபிறகு, மழைபெய்யும் நாட்களில், மழையில் மட்டுமே குளிப்பது எங்களின் வழக்கம். மாடி வீடுகளின் மொட்டைமாடியில் தேங்கும் நீரை பூமிக்கு அனுப்பும் குழாய்களின் கீழே நின்று குளிப்பது வரம். வானிலிருந்து பூமிக்கு வந்த மன்னாவுக்கு எந்த வகையிலும் இந்த மழைநீர் குறைந்ததல்ல. தெருவில் எந்த மாடிவீட்டுக்குழாய் பூமிக்கு அதிகநீரைக் கொண்டுவரும் என்பது தெரிந்து, அதன்கீழ் நின்று குளிப்பதற்கு வாண்டுகளாகிய நாங்கள் போடும் சண்டைகளின் முன்பு, கார்ட்டூன் தொலைக்காட்சிகள் பிச்சையெடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வீடுவரும்போது பெய்கிற அந்திமழையில் முழுதாய் நனைந்தபடி வீட்டுக்கு வரும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. மழை பெய்கிறதென்பதற்காக அலுவலகத்தைவிட்டு கிளம்பாமல் இதுவரை இருந்ததில்லை. "காய்ச்சல் வந்தா என்ன செய்றது" என்று மூன்று தசாப்தங்களாக என் அம்மா சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஒருமுறைகூட மழையில் நனைந்து காய்ச்சல் எனக்கு வந்ததில்லை.  என்னையும், மழையைக்கண்டு ஓடும்போது நனைந்தவர்களையும் தரம்பிரிக்க மழைக்குத்தெரியும். காய்ச்சலை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியை மட்டும் எனக்குத்தருகிறது.

சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருந்த மழைநாட்களில் எங்கள்வீட்டு மொட்டைமாடி திருவிழாவாக மாறும். மாடியில் நம் இடுப்பளவு நிற்கும் தூண்களில் ஏறிநின்றுகொண்டு "தகிடததிமி, தகிடததிமி, தந்தானா" என்று பாடிக்கொண்டே பரதநாட்டியம் ஆடுவோம். பக்கத்துவீட்டு ஆளில்லா மொட்டைமாடிகளை நனைக்கும் மழைத்துளிகளைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கும். சாளரங்கள் வழியாக எங்களின் கூத்துகளைப் பார்க்கும் குழந்தைகள் அதனினும் பாவம். மழை, காலங்காலமாக குழந்தைகளைத் தீண்டவே பூமிக்கு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?!! ஆம். காரணம், உங்களைப்போல் அசிங்கமாக மழை பெய்தவுடன் கைகளைக்கொண்டு தங்கள் தலையை அவர்கள் மறைப்பதில்லை. பதிலாக, அண்ணாந்து பார்த்து மழைத்துளிகளை தங்கள் முகங்களில் ஏந்திக்கொள்கின்றனர். மழையின் குரலுக்கான செவிகள் அவர்களிடம் மட்டுமே இருக்கின்றன. மழையின் மொழி அவர்களுக்கு மட்டுமே புரியும். ஏன் குழந்தைகளை பூட்டி வைக்கிறீர்கள்? அவர்களை மழையில் நனையவிடுங்கள். குழந்தைகளைப் பூட்டிவைத்துவிட்டு, இப்போதெல்லாம் மழை சரிவர பொழியவில்லையென வருந்தி பயனில்லை. "குழந்தைகள் நனையாத ஊருக்கு மழை வராமல்போகும் சாத்தியங்களும் உண்டாம்!" நான் சொல்லவில்லை. இப்போதுதான் படித்தேன். வண்ணதாசன் சொல்கிறார்!!

ஏன் சென்னையில் மழை பெய்வதில்லை என்று என்னைப்போல், இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கலாம்!! இனிமேலாவது இயன்றவரை உங்கள் குழந்தைகளை மழையில் நனைய அனுமதியுங்கள். இறுதிக்காலங்களில் தங்கள் பேரக்குழந்தைகளை மடியிலமர்த்திச் சொல்வதற்கு கதையற்றவர்களாக உங்கள் குழந்தைகளை மாற்றிவிடாதீர்கள். மழைக்கதைகள் எப்போதும் கேட்கப்படும். இப்போது நான் சொன்ன கதையை நீங்கள் படித்துமுடித்திருப்பதே அதற்கான சாட்சி!!

-விஷன்.வி

இராப்பாடி

இரவு முழுக்க உறங்கவில்லை.  இது புதிதுமில்லை. சிறுவயதிலேயே இந்த இரவுறங்காப் பழக்கத்துக்குப் பழகிவிட்டேன். முன்னிரவை வாசித்தும், பின்னிரவை எழுதியும் கடப்பதில் ஒரு சுகம் உண்டு. உறங்காமல் கழித்த இரவு, விடியத்தொடங்கியதும் நடந்துவந்து எலுமிச்சைத்தேனீர் பருகுவதில் பெரும்சுகம் உண்டு. நீண்ட காத்திருக்குப்பின் பருகும் இதழ் போல! உள்ளே செல்லும் தேனீர் வெளியே கொண்டுவரும் நினைவுகளின் சுவையைச் சொல்லிமாளாது. இதுபோல் இரவு முழுக்க உறங்காமல் சுற்றித்திரிபவர்களை ஊர்ப்பக்கம் "இராப்பாடி" என்பார்கள்.
மனம் இணையஇதழில் பணியாற்றத் துவங்கிய நேரம். இரவுநேரப் பணியாளர்கள் பற்றிய தொடர் ஒன்று எழுத வேண்டுமென ஆசிரியர் சொன்னதும், இராப்பாடி என்று பெயர் வைக்கலாம் என்றேன். எழுதவும் செய்தேன். சிறுவயதில் நான் பார்த்த "ஆகாஷ தூது" என்கிற மலையாளத் திரைப்படத்தில் "இராப்பாடி கேளுந்துவோ" என்ற அற்புதமான பாடல் ஒன்றுண்டு. மலையாளத்திரையுலகம் இருக்கும்வரை, இந்தப்பாடலைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். நான் முதன்முதலில் இராப்பாடி என்கிறச்சொல்லை இப்பாடலில்தான் கேட்டிருக்க வேண்டும்.
எங்கள் ஊரின் பெரும்பான்மையான வீடுகளில் தொலைக்காட்சிப்பெட்டி நுழையாத காலகட்டம் அது. அவ்வப்போது டிவி, வீடியோ கேசட், வி.சி.ஆர் போன்ற வஸ்துக்களை வாடகைக்கு எடுத்து நீளமான திண்ணை இருக்கும் வீடுகளில் படம் போடுவார்கள். இரவு எட்டு மணியளவில் ஏதாவதொரு ஆட்டோ, நான் மேற்சொன்ன வஸ்துக்களை ஏற்றிக்கொண்டு போகும். சிறுவர்களான நாங்கள் அந்த ஆட்டோவின் பின்னால் ஓடி, அது சென்றுநிற்கும் தெருவை உறுதிசெய்துவிட்டு வருவோம். முடிந்தால் எந்த திரைப்படம் என்பதையும் அங்கேயே உறுதிசெய்து கொள்வோம். பின்னர் வீடுவந்து இரவு உணவை முடித்துக்கொண்டு, கையில் ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு அந்த தெருவுக்குச் சென்று டிவிக்கு மிகஅருகில் அமர்ந்து படம் காணவேண்டியதுதான். என் தந்தையார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்பதால் எனக்கு எப்போதாவதுதான் இதுபோல் படம் காண்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி ஒருமுறை கிடைத்த வாய்ப்பில் பார்த்த திரைப்படம்தான் ஆகாஷ தூது! இந்த திரைப்படத்தைப் பார்த்து யாரேனும் அழாமல் இருந்துவிட்டால் அது உலக அதிசயத்தில் சேரும்! அன்று என்னருகில் அமர்ந்து இப்படத்தைப் பார்த்து அழுதுகொண்டிருந்த பால்யநண்பர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். படத்தின் இடைவேளையிலிருந்து ஒவ்வொருவராக அழ ஆரம்பித்தனர். அப்போதே கல்நெஞ்சக்காரனாக இருந்த நான், கடைசிவரை அழாமல் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தேன். ஊனமுற்ற குழந்தை ஒன்று நாதியற்று நிற்கும் படத்தின் இறுதிக்காட்சியில் ஒட்டுமொத்த கூட்டமும் சத்தமாக ஒப்பாரிவைக்க, தேம்பித்தேம்பி அழத்தொடங்கினேன் நான். அன்றிரவும் இன்றுபோல் நான் உறங்கவில்லை.
இரவு முழுக்க உறங்காமல் பாடித்திரியும் பறவைக்கு இராப்பாடி என்று பெயர். தேன்சிட்டு என்பார்கள் தமிழில். நள்ளிரவில் வீட்டின் முன்வந்து நின்று "ஜக்கம்மா வந்திருக்கா" என்று குறிசொல்லும் சாமக்கோடாங்கிகளுக்கும் இராப்பாடி என்கிற பெயர் உண்டு. எனக்கும் உண்டு.
நீங்களும் அவ்வப்போது இராப்பாடிகளாக வாழ்ந்து பழகுங்கள். இதுபோல் அழகான நினைவுகளில் கரையவும் கற்றுக்கொள்ளுங்கள்! கரைதலில் இதழ் சுவையை விஞ்சும் பெரும்சுகம் உண்டு!!
விஷன்.வி

பெண் பிசாசாக இருக்கலாம்

மாலையிலிருந்து விட்டுவிட்டு விழுந்து கொண்டிருந்த தூறல் இப்போது சுத்தமாக நின்றுவிட்டிருக்கிறது. அறையில் தனியே படுத்திருக்கிறேன். நள்ளிரவில் வீட்டினுள் குதிக்கும் பூனையின் தொந்தரவால் இப்போதெல்லாம் சாளரத்தை மூடிவிடுகிறேன். மணி இப்போது சரியாக இரண்டைக் கடக்கிறது. யாரோ ஒரு பெண் வீட்டிற்கு வெளியே என் அறையின் சாளரத்தையொட்டி நடந்து கொண்டிருக்கிறார். என் தலைக்கு மேல் புயலெனச் சுழலும் மின்விசிறியின் சத்தத்தையும் மீறி அந்தப் பெண் நடப்பது எனக்கு கேட்கிறது. அதற்கு அவர் அணிந்திருக்கிற மணிகள் நிரம்பிய கொலுசுகள் காரணம்!!
ச்சல்.. ச்சல்.. ச்சல்....
ஏதேனும் பெண் பிசாசாக இருக்கலாம். நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் பிசாசுகளை முழுதாகப் புறக்கணிக்க முடியவில்லை.
"வெள்ளிக்கொலுசு மணி..
வேலான கண்ணுமணி..
சொல்லி அழைச்சதென்ன..
தூங்காம செஞ்சதென்ன.."
வழக்கம்போல் காலநேரம் தெரியாமல் ராஜா வாசிக்கிறார். மனதிற்குள் இந்தப்பாடலை பாடிக் கொண்டிருக்கிறேன். நினைவுகள் சிலபல வருடங்களுக்கு முன்பு செல்வதை தடுக்க முடியவில்லை.
கொச்சியில் ஒரு நிறுவனத்தில் பணி கிடைத்திருந்தது. கொச்சியில் அலுவலகம் இருக்கும் இடத்தைக் கேட்டுவிட்டு, பக்கத்திலேயே பெண்கள் கல்லூரி ஒன்று இருக்கிறது. Go & Enjoy எனச்சொல்லி சீனியர் ஒருவர் அனுப்பி வைத்தார். அவர் சொன்னதுபோல் அக்கல்லூரியும் இருந்தது. ஆனால் நான் தங்குவதற்காக அவர்கள் கொடுத்த வீடு, அழகிய அந்த நகரத்தைவிட்டு தூரமாக இருந்தது. ஒரு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பேருந்தில் அமர்ந்திருக்க வேண்டிய அவஸ்தை.
மிகப்பெரிய வீடு. வீட்டின் காம்பவுண்டுக்கும் வீட்டு வாசலுக்கும் முன்னூறு மீட்டர் தூரமாவது இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அருகில் வீடுகள் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு வீடு தெரிந்தது. வீட்டினுள் படுக்கையறை மட்டும் ஏழு. பெரிதுபெரிதாக திண்ணை, வரவேற்பறை, சமையலறை வேறு. குடும்பமாக வாழ்ந்தால் சொர்க்கம்தான். நானோ தன்னந்தனியனாக இரவு ஒன்பது மணிக்குமேல் வீட்டினுள் நுழைவேன். ஒரு பேய் பங்களாவுக்குள் நுழைவதுபோல் இருக்கும். படுக்கையில் விழுந்தால் வீட்டைச்சுற்றிலுமிருந்து விதவிதமான ஒலிகள். சிலநேரம் வீட்டினுள்ளும் கேட்கும். இடையிடையே கேட்கும் கொலுசுச்சத்தத்தில் பயத்தின் உச்சம் செல்வேன்!! சந்தேகமே இல்லை. பேய் பங்களாவேதான்!! "நம்ம டெட்பாடிதான் ஊருக்குப் போகும்போல" என மனது சொல்லும்.
ஒருவாரம் இப்படியே பயத்தில் கழிந்தது. பயத்திற்கு கொஞ்சம் பழகிப்போயிருந்த இரண்டாவது வாரத்தின் ஒரு நள்ளிரவில், ஏனோ எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அன்றுதான் முதல்முறையாக நிம்மதியாக உறங்க ஆரம்பித்திருந்தேன். சட்டெனத் துவங்கியது கொலுசுச்சத்தம். தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன். வேறு எந்தச் சத்தமும் கேட்காததால் அந்தக் கொலுசுச்சத்தம் மிகத்தெளிவாக கேட்டது. சந்தேகமே இல்லை. யாரோ வீட்டைச்சுற்றி நடக்கிறார்கள். அந்தச் சத்தம் பயணிக்கும் திசையை வைத்து என்னால் எளிதாக அதை ஊகிக்க முடிந்தது. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி யோசிக்கத் துவங்கினேன். "வீரம்னா என்னன்னு தெரியுமா?! பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்" தலைவன் சொன்னது உண்மை!! பயம் இல்லாதவன்போல் என்னை
நானே நினைத்துக்கொண்டு, படுக்கையிலிருந்து எழுந்து சிலபல அறைகளைக் கடந்து, தலைவாசலைத் திறந்தேன். நல்லவேளை வாசலில் யாருமில்லை. வாசற்படியில் அமர்ந்து கொண்டேன். இப்பொழுது அந்த கொலுசுச்சத்தம் வீட்டின் பின்புற இடது மூலையிலிருந்து முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. நீளமான வீடு.
அவள் நடந்துவந்து சேர ஒன்றிரண்டு நிமிடங்களாவது பிடிக்கும். எழுந்து உள்ளே ஓடிவிடலாமா என யோசித்தேன். கமல்ஹாசனின் குரல் மீண்டும் உள்ளுக்குள் கேட்டது. "வீரம்னா என்னன்னு தெரியுமா?!"
"பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்" நான் பதில் சொல்லிக்கொண்டேன். ஆண்கள் கொலுசுகள் அணிவதில்லை. வருவது யாரோ ஒரு அவள்தான். சத்தம் நெருங்கிவிட்டது. இப்போது கமலின் குரல் கேட்கவில்லை. பயத்தில் நடுங்கத்தொடங்கினேன். சத்தம் வலதுபக்கமாக என்னை நோக்கித்திரும்பியது. மெதுவாக கண்களைத் திருப்பினேன்.
..
...
யாரும் இல்லை. ஆனால் சத்தம் வந்து கொண்டிருந்தது. இப்போது அந்தச்சத்தம் எனக்கு நேரெதிரே ஒலித்துக் கொண்டிருந்தது. பின் அப்படியே அந்தச் சத்தம் தரையிலிருந்து மேலெழும்பத் தொடங்கியது. என்ன நடக்கிறதென்று புரியவில்லை. பயந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் உயரமாக எழும்பியது. வீட்டின் முன்பு நிற்கும் மரத்தின் அளவு உயர்ந்தது. பின்னர் மெதுவாக அந்தச்சத்தம் அம்மரத்தின் ஒரு கிளையில் சென்று அமர்ந்து கொண்டது. அப்போதும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் இப்போது கொஞ்சமும் பயமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பூச்சிகளும் கொலுசுகள் அணியும் என்பதை நான் அப்போதுவரை அறிந்திருக்கவில்லை!!
மணி இப்போது சரியாக மூன்றைக் கடக்கிறது. மழை பெய்யத்துவங்கி விட்டது. என் அறைக்கு வெளியே இப்போது கொலுசுச்சத்தம் கேட்கவில்லை. ஏதோ ஒரு மரத்தின், ஏதோ ஒரு கிளையில் அச்சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.
விஷன்.வி

மழை என்னும் கால இயந்திரம்




மழை எப்போது பூமிக்கு வந்தாலும் நான் அது கொண்டுவரும் குளிர்க்காற்றில் ஏறி, இதுவரை கடந்துவந்த மழைப்பொழுதுகளில் சென்று இறங்குவதுண்டு. இப்பெரும் சக்தி மழைக்கு மட்டுமே உண்டு என்பதை நீங்களும் உணர்ந்திருக்கலாம். நேற்றிரவில் மழையில் நனைந்தபோதும் இதுபோல் ஒரு பின்னோக்கிய பயணம் செல்ல நேர்ந்தது. மழைக்கால நினைவுகளை ஒவ்வொன்றாய் பார்த்தபடி கடந்ததில், இங்கின்று எதைச்சொல்வதென்கிற குழப்பம் இன்னும் தீர்வதாயில்லை. சொல்வதற்கு ஒருநூறு மழைக்கதைகள் உள்ளன என்னிடம்.
மழைநீர் நனைத்த சிறு இதழ்களை பருகிய கதையின் ஏகாந்த நிமிடங்களை வர்ணிக்க தோதான இடம் வேண்டும். பொதுவெளியில் சொன்னால் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பருகி, உருகியவர்கள் கொஞ்சம் நாணக்கூடும். சென்சார் கருதி அதைச்சொல்லாமல் விடுகிறேன்.
"முதல்மழை என்னை நனைத்ததே" என்று பலமுறை பாடியிருக்கிறோம். முடிந்தால் மழையில் நனைகிறோம். முடியாவிட்டால் சாளரம் வழியாக மழையைப் பார்க்கிறோம். ஆனால் எப்போதாவது நம்மை நனைத்த அல்லது நாம் பார்த்த முதல்மழை எதுவென்று யோசித்திருக்கிறீர்களா?!!
வாய்ப்பில்லை. அதற்கு, மழையைக்கண்டு ஒதுங்காத மனமும், மழையின் மடியிலேறிப் பின்னோக்கிப் பறக்கும் வரமும் கிட்டியிருக்க வேண்டும். ஓராயிரம் சாபங்கள் பெற்றிருந்தாலும் அரிதாகக்கிடைக்கும் இதுபோல் ஒருசில வரங்களே இங்கே சிலரின் வாழ்வை அழகாக்குகிறது என நம்புகிறேன்.
அது ஒரு பெருமழைக்காலம். ஒரு சிறு ஓட்டு வீடு. நள்ளிரவு. ஒருவயது நிரம்பாத குழந்தை எனக்கு, அப்போது இரவு எத்தனை மணி என்பது எப்படித் தெரியும்?! கும்மிருட்டு என்பது மட்டும் நினைவிலிருக்கிறது. பின்னெப்படி ஒருவயது நிரம்புவதற்கு முன் நடந்த சம்பவம் மட்டும் நினைவிலிருக்கிறது என்று கேட்டுவிடாதீர்கள். அம்மாவும் அடிக்கடி "இதெல்லாம் எப்டி உனக்கு ஞாபகத்துல இருக்கு" என்று கேட்பார். பெற்ற வரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
அந்த இருளிரவில் அம்மாவின் அருகில் படுத்திருந்தேன். கொஞ்சம் இடைவெளிவிட்டு இன்னொரு பாயில் பாட்டி படுத்திருந்தார். 'சோ'வென்று பெய்ததா என நினைவில்லை. ஆனால் பெரும் சத்தத்துடன் மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென 'பொத்'தென்ற சத்தத்துடன் மேற்கூரையிலிருந்து ஏதோ ஒன்று என்னருகில் வந்துவிழுந்தது.
சரிதான்! நினைவிருக்கிறது. பொத்'தென்ற சத்தம்தான்!
அச்சத்தம் கேட்டதும் தூக்கத்திலிருந்து எழுந்த அம்மா ஏதோ ஒன்றின் பெயரைச்சொல்லி கத்திக்கொண்டு, என்னையும் அள்ளிக்கொண்டு வெளியே ஓடினார். பின்னால் பாட்டி ஓடிவந்தாரா என்பதெல்லாம் நினைவில் இல்லை. அம்மா வீட்டைவிட்டு வெளியே ஓடி எதிர்வீட்டுத் திண்ணையில் சென்று நின்றுகொண்டார். ஒருவேளை எதிர்வீட்டுத் திண்ணையைத் தொடும் முன்னர் நான் மழையில் நனைந்திருக்கலாம். ஆனால் அம்மாவின் இடுப்பில் அமர்ந்தபடி, நான் மழையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பள்ளிவிடுமுறை நாட்களில் கேரளாவில் இதுபோல் மழையை, பின்பு ஓரிருமுறைப் பார்த்திருக்கிறேன். எதிரே இருக்கும் எதுவும் தெரியாவண்ணம் சேர்த்துக்கட்டிய மூங்கில்களைப் போல அடர்த்தியான மழை. பிஞ்சு மனதில் விதைத்த விஷம் என்பார்களே.. அதுபோல் பிஞ்சு மனதை நனைத்த முதல்மழை என்பதால்தானோ என்னவோ, இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. சந்தேகமேயில்லை. என் நினைவில் அதுதான் நான் பார்த்த முதல் மழை!!
அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருந்தேன். வீட்டினுள்ளே யாரோ, எதுவெல்லாமோ பேசுகிற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது எதுவும் புரிவதற்கில்லை. பின்னாளில் என்னருகில் விழுந்தது விஷப்பாம்பு என்றார்கள். நான் அப்போது அழுததுபோல் ஞாபகமில்லை. அம்மாவையும் மழையையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததாக நினைவு. அம்மா அநேகமாக வெள்ளைநிறத்தில் பூக்கள் நிரம்பியிருந்த சேலை அணிந்திருந்திருக்கலாம்.
இந்த நிகழ்வு முழுவதும் தூரத்துத் திரையில் அரங்கேறும் மங்கலான காட்சிகள்போல இப்போதும் என் கண்முன் நிழலாடுகிறது. வீட்டில் பாம்பு விழுந்த கதையென்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததும் இந்நிகழ்வு மறக்காமல் மனதிலேறி விட்டதற்கான காரணமாக இருக்கலாம். காரணங்கள் எதுவாக இருந்தாலும் இன்று இக்கதையை பகிர்ந்ததற்கான காரணம் மழை மட்டுமே! நான் சொன்னதுபோல் மழை எப்போதும் எனை ஏற்றிக்கொண்டு பின்னோக்கிப் பறக்கிறது. வரம் எதுவும் தேவையில்லை. மனமும், நினைவில் லயித்திருக்க நேரமும் இருந்தால் நீங்களும் மழையோடு பறக்கலாம்.
ஆம். மழை ஒரு காலஇயந்திரம்!!
விஷன்.வி

முன் ஜென்மம் செல்லலாமா?

நாம் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. கடந்தகால நினைவுகளிலும் எதிர்கால கனவுகளிலும்தான் வாழ்கிறோம் என்பது மனித இனத்தின்மீது மனிதர்களே சுமத்தும் குற்றச்சாட்டு.
உண்மையில் நிகழ்காலம் என்கிற
ஒன்று இருக்கிறதா?! சட்டென கடந்துவிடுகிற குறுநொடிகள்தான் நிகழ்காலம் என்றால் அதில் எங்ஙனம் வாழ்வது?
நாம் கடந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நிகழ்கால நொடிகளும் சுகமான அல்லது சுமையான கடந்தகாலங்களாக நம் மனதில் நிறைந்துகொண்டே இருக்கின்றன. கடலின் உயரத்தை சத்தமின்றி அதிகமாக்கிக்கொண்டே செல்லும் மழைத்துளிகளைப்போல!!
உண்மை இங்ஙனம் இருக்கையில், நம் கனவுகளைத் தாங்கிவரும் எதிர்காலத்திலும், நம்மை தழுவிச்சென்ற
கடந்தகாலத்திலும் நாம் வாழ்வதுதானே நியாயம்?!
எதிர்காலக்கனவுகள் என்பது கனவுகள் மட்டுமே. விடியற்காலையில் காணும் கனவுகள் பலிக்கும் என்பதைப்போல, சிலநேரம் நம் ஆசைகளும், லட்சியங்களும் நிறைந்த கனவுகள் பலித்துவிடும். பலிக்காத கனவுகள் காற்றலையில் எண்ணங்களோடு, எண்ணங்களாக மிதந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்தகால நினைவுகள் என்பது நம் உடலில் இறங்கி, உயிரைத்தழுவிச்சென்ற நிஜங்கள். வலியோ, சுகமோ அதிலேயே உழன்று கிடப்பதில் நாம் கொஞ்சம் நிம்மதியை உணர்கிறோம். அதிலும் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்த
சிறுவயது நினைவுகளில் மூழ்கிக்கிடப்பதில் கூடுதல் நிம்மதி. வாடகை கொடுக்காத குடியானவனாய் அங்கேயே நாம் வாசம் செய்வதற்கான காரணமும் இதுதான்.
எனக்கு முன்ஜென்மம் குறித்து வாசிக்கவும், யோசிக்கவும் விருப்பம் அதிகம். அது எப்படி உண்மையாக இருக்கக்கூடும் என்றெல்லாம் தர்க்கரீதியாக யோசிக்காமல், குளிர்காற்றில் ஏறி சிறுபிராய மழைக்காலத்திற்குப் பறப்பதைப்போல மனஊஞ்சலில் ஏறி அவ்வப்போது முன்ஜென்மம் சென்று வருவதுண்டு. முன்பொருமுறை "பிரபஞ்சத்தின் முதல் காதலி" என்றொரு கதை எழுதியிருக்கிறேன். இவ்வுலகத்தில் முதன்முதலாக காதலிக்கப்பட்ட பெண்ணைத் தேடிப்பயணிக்கும் இளைஞனின் கதை. குரங்கிலிருந்து மனிதனாக மாறியபின் நெடுங்காலம் காமத்தோடு மட்டுமே பெண்ணை அணுகிக்கொண்டிருந்த மனிதனின் மனதில் முதன்முதலாக காதல் தோன்றச்செய்த பேரழகியைக் காணும் ஆவலின் வெளிப்பாடு அது. கதையின் முடிவைக் கேட்டவர்கள் அனைவரும் அழகு என்றனர். இன்றொரு பேரழகியிடம் அக்கதையை சொல்லிக்கொண்டிருந்தேன். பாதியிலேயே கதையின் முடிவைச் சொல்லிவிட்டார். ஆச்சரியமாக இருந்தது. யாருக்குத் தெரியும் இந்தப் பிரபஞ்சத்தின் முதல் காதலியின் மறுபிறப்பு இந்தப் பேரழகியாகவும் இருக்கலாம்
ஒருசில காதல் திரைப்படங்களில் சொல்வதைப்போல நமக்கெல்லாம் உண்மையாகவே முன்ஜென்மம் இருந்து அங்கே காதலித்துப் பிரிந்தவரை மீண்டும் இங்கே சந்திக்க நேரவும் வாய்ப்பிருக்கிறதல்லவா?!! சிந்தித்துப்பார்த்தால் சிறுவயது நினைவுகளைவிட இது கூடுதல் சுகம் தருகிறது. காதலர்களை மட்டுமல்ல. நண்பர்களையும் சந்திக்க நேரலாம்.
தொட்டுத்தொடரும் பட்டுப்பாரம்பரியம்போல இங்கே நாம் சந்திப்பவர்களெல்லாம் அங்கேயும் நம்முடன் பயணித்தவர்களாக இருந்தால்?!!
சம்மந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருவர் நம் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாகத் திருப்பிப்போட்டுச் சென்று விடுவார். கவனித்திருக்கிறீர்களா? அது நம் முன்ஜென்மத்து துரோகத்தின் தண்டனையாக இருந்தால்?!
வாழ்க்கையில் தினம்தினம் எத்தனையோ புதிய மனிதர்களைச் சந்திக்கிறோம். இயல்பாக கடந்து செல்கிறோம். ஆனால் முன்பின் பரிச்சயம் இல்லாத யாரோ ஒருவரை பார்த்த முதல்நொடியிலேயே நம் உள்மனம் ஏதோவொன்றைச் சொல்லியிருக்கும். எங்கிருந்தோ வந்த அவர், நம்முடன் நீண்டகாலம் பயணித்திருப்பார். சிலருக்கு காதலியாகவோ, காதலராகவோ மாறியிருப்பார். இன்னும் சிலருக்கு வாழ்க்கைத் துணையாக மாறியிருப்பார். யோசித்துப்பாருங்கள். இவர்கள் ஏன் முன்ஜென்மத்திலும் நம் துணையாக இருந்திருக்கக் கூடாது?
காதல், நட்பு, உறவு போன்ற எதுவுமில்லாத யாரோ ஒருவர் நம்மீது மிகுந்த அக்கறையோடு இருப்பார். முன்ஜென்மத்தில் இவர் நமக்கு யாராக இருந்திருக்கக்கூடும்?!
ஃபேன்டஸியாக சிந்தித்தால் இன்னும் நிறைய கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. பதில்களும் அவசியம். இன்னும் எத்தனை நாள்தான் நானும் உங்களை, உங்களது சிறுவயது நினைவுகளுக்கு மட்டுமே அழைத்துச்செல்வது? சிறுகவிஞன் எனக்கும் பொறுப்பிருக்கிறதல்லவா?!
என் கவிதைகளை ஊற்றி உடல்செய்து, என் கனவுகளை நிரப்பி இறக்கைகள் சேர்த்து, என் மூச்சுக்காற்றை ஊதி உயிரேற்றி ஓர் அழகிய பட்டாம்பூச்சியை படைத்திருக்கிறேன். என் எண்ணங்களெல்லாம் அதன் வண்ணங்களாக மாறியிருக்கின்றன. அது பறக்கத்துவங்கி விட்டது. அதன் இறக்கைகளைப் பிடித்துக்கொண்டு பறக்கலாம் வாருங்கள். முன்ஜென்மம் செல்லும்வழியை நான் உள்நிரப்பிய என் கனவுகளும் கவிதைகளும் அந்தப் பட்டாம்பூச்சிக்கு சொல்லும். அழகான அக்காலம் சென்று, இங்கே நாம் கண்ட உறவுகளுடன் அங்கேயும் நாம் இருக்கும் அழகியக் காட்சிகளைக் காணலாம். இங்கே அறியா, தெரியா, புரியாவிடைக்கு அங்கே விடைகாணக் கிடைக்கலாம். அங்கேயும் நாம் செய்துகுவித்தப் பிழைகளைக் காணலாம். இங்குவந்து அவற்றை திருத்திக்கொள்ளலாம். வெளியே சொல்லவியலாத நம் பாவங்களை அங்கிருக்கும் நதிகளில் மூழ்கிக்கழுவலாம். இங்கே இழைக்கப்பட்ட துரோகங்களின் காரணகாரியங்களை அங்கே அறியலாம். இன்னும் ஒருநூறு கேள்விகளைச் சுமந்திருப்போரே! என்னுடன் வாருங்கள் நம் முன்ஜென்மம் நோக்கிப்பறக்கலாம். விடைகண்டு தெளியலாம். விரும்பினால் திரும்பலாம். இல்லையேல் அங்கேயே தங்கிவிடலாம்.
விஷன்.வி

அது ஒரு மழைக்காலம்

அப்பொழுதெல்லாம் காலம்தப்பி மழை பெய்வதில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் முதல் திங்கள்கிழமை கோடைவிடுமுறை முடிந்து நான் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாளில் குடையையும் மீறி நம்மை நனைக்கும் அடைமழையில் நனைந்தபடியேச் செல்வேன். அந்த ஜூன் மாதம் மட்டும் குறைந்த பட்சம் பத்து நாட்களாவது மழைக்கான விடுமுறை கிடைக்கும். சிலநாட்களில் பள்ளி துவங்கியபின் மழை பெய்யத்துவங்கும். அதுபோன்ற நாட்களில் வகுப்பில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு பீரியடுக்கும் நடுவில் அடிக்கும் மணியைக் கவனித்துக் கொண்டிருப்போம். எங்களின் பள்ளி மணியை அடிக்கும் பொறுப்பிலிருந்த சவரிமுத்து ஐயா, எங்களின் நாடித்துடிப்பை எகிறவைக்கவெண்ணி நீண்டநேரம் தொடர்ச்சியாக மணியை அடித்துவிட்டு இறுதியாக “டொய்ங்.. டொய்ங்.. டொய்ங்...” என்று மூன்றுமுறை அடிப்பார். அப்படி மூன்றுமுறை மணி அடித்தால் இன்றைய வகுப்பு முடிந்தது என்று பொருள். மகிழ்ச்சியில் பையைத் தூக்கிக்கொண்டு வீட்டைநோக்கி ஓடுவோம். அப்படியே ஓடிக்கொண்டிருந்தபோது வாழ்க்கை எந்தவித பரபரப்புமின்றி மழையற்ற மதியநேரத்து நதியைப்போல அத்தனை அமைதியாக இருந்தது. இன்று பெருநகரத்துப் பேரிரைச்சலுக்கும் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை.

தினமும் பள்ளிக்குச் செல்வதென்பது எங்களுக்கு திருவிழாவுக்குக் கிளம்பிச்செல்வது போல கொண்டாட்டமாய் இருக்கும். காலை ஆறரை மணிக்கு எழும்பியவுடன் வீட்டிலிருக்கும் எனக்கான கட்டம்போட்ட துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, பற்பசை நிரம்பிய டூத் பிரஷ்  மற்றும் பிங்க் நிறத்து பால்மொலிவ் சோப்பிருக்கும் சோப்பு டப்பாவை கைகளில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு வீட்டைக் கடக்கும்பொழுதும் ஒவ்வொரு நண்பன் என்னைப்போன்ற அதே கெட்டப்பில் வெளியே வருவான். மொத்தமாக ஆறேழுபேர் கொண்ட குழுவாக ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பிப்போம். ஆற்றங்கரையில் அமர்ந்து உடைமாற்றி, துண்டை கட்டிக்கொண்டு பல்துலக்க ஆரம்பித்தால், ஒவ்வொருவரும் தமது வகுப்பில் நடந்த சுவாரசியக்கதைகளை சொல்லி முடிக்கும்வரை பல்துலக்கல் தொடரும். கணக்கு வாத்தியார்களுக்கு கிடைக்கும் வசவுகளை சொல்லாமல் விடுகிறேன். பின்னர் ஆற்றில் குதித்து குளிக்க ஆரம்பித்தால் அடுத்த ஒருமணிநேரம் செம்மண் நிறத்து ஆறு கருமைநிறமாக மாறும்வரை நீச்சலடித்துக் குளிப்போம். முடிந்தவரை அமைதியாகக் குளித்துக்கொண்டிருக்கும் பெரியவர்கள் ஒருகட்டத்துக்குமேல் கடுப்பாகிக் கரையேறி, எங்களின் உடைகளை தேடிக்கண்டுபிடித்து ஆற்றில் வீசுவர். அதை நீந்திப்பிடித்து, பெரியவர்களுடன் சண்டையிட்டு, இன்னும் பல களேபரங்கள் முடிந்து கரையேறி வீட்டுக்கு வருவோம். ஜூன் மாதம் துவங்கி அடுத்த ஏப்ரல் மாதம்வரை, அதாவது அவ்வருடப் பள்ளிப்படிப்பு முடிந்து, அடுத்தக் கோடை விடுமுறை வரும்வரை இப்படியே எங்களின் ஒவ்வொரு காலைப்பொழுதும் துவங்கி முடியும்.
அதுவரை அவ்வப்போது பெய்யும் மழை, கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பெய்வதை சுத்தமாக நிறுத்திவிடும். இப்பொழுதுபோல் காற்றழுத்த தாழ்வுமண்டல மழை அப்பொழுதெல்லாம் பெய்வதில்லை என்பதால் கோடைகாலத்தில் மழை பெரும்பாலும் பெய்வதில்லை. இதனால் தினமும் நாங்கள் குளிக்கின்ற ஆற்றின் நீரோட்டம் நின்றுவிடும். போதாக்குறைக்கு கடலுக்கு அருகில் எங்கள் ஊர் இருப்பதால் கடல் நீர் ஆற்றினுள் புகத்துவங்கி ஆறு உப்பேறத்துவங்கி விடும். சிலபல நாட்களில் ஆற்றின் செம்மண் நிறம் கொஞ்சம்கொஞ்சமாக பச்சை வண்ணத்தில் மாறத்துவங்கும். அன்று ஊரில் பெரும்பாலான வீடுகளில் வாட்டர் கனெக்ஷன் கிடையாது. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் மன்னர் காலத்தில் வெட்டிய ஒரு கால்வாய் ஓடும். அதில்தான் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற காரியங்களை மங்கையர் செய்து முடிப்பர். குடிநீர் தேவையை தெருக்கள்தோறும் அமைந்திருக்கும் நகராட்சி குடிநீர்க்குழாய்கள் குறைவின்றி தீர்த்து வைக்கும். குளிப்பதற்கு எங்கள் வீட்டிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவிலிருக்கும் நான் மேல சொன்ன ஆறு. இந்த ஆற்றுக்கு பாம்பூரி ஆறு என்று பெயர். அதன் துவக்கம் ஏதேனும் மலையாக இருக்கலாம். எந்த மலை என்கிற ஆராய்ச்சியில் இதுவரை மனம் ஓடவில்லை.

கோடை காலத்தில் கடல்நீர் உட்புகுந்து விடுவதால் ஆற்றில் குளிக்க முடியாத சோகம் ஏற்படும். ஆனாலும் அசர மாட்டோம். காலை முதல் மதியம் வரை கிரிக்கெட் விளையாடிவிட்டு மதியம் வழக்கம்போல் துண்டு மற்றும் சோப்பு சகிதம் பாம்பூரி ஆற்றின் கரையோர செம்மண் சாலைவழி ஆற்றைப் பார்த்தபடியே நடக்க ஆரம்பித்தால் உள்ளே செல்லச்செல்ல ஆற்றின் நிறம் பச்சை வண்ணத்திலிருந்து இளம் மஞ்சள் நிறத்திற்கு மாறத்துவங்குவதைப் பார்ப்போம். ஆறு மஞ்சள் நிறத்தில் இருந்தால் கடல்நீர் புகாத இடம் என்று புரிந்துகொள்ளலாம். மழைக்காலத்தில் இருக்கும் தூய்மையும், வாசமும் குறைவாக இருந்தாலும் தலைநனைய, மனம்நிறைய குளிக்கலாம்.

ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, பள்ளிகள் மீண்டும் துவங்கும் நேரத்தில் மீண்டும் மழைக்காலம் வரும். ஆற்றின் நிறம் பழையபடி செம்மண்போல் மாறும். பழையபடி செம்மண் நிறம் கறுப்பாகும் வரை தினமும் குளிப்போம். மீண்டும் கோடைக்காலம் வரும். மீண்டும் ஆறு பச்சை நிறமாக மாறும். இப்படியாக மஞ்சளும், பச்சையுமாய் எங்களின் வாழ்க்கை நீரோடு இணைந்து அன்று அத்தனை அழகாய் இருந்தது. இதுதான் என் பால்யகாலத்துக்கும் நீருக்குமான சம்மந்தம்!

படித்துமுடித்து சென்னைக்கு
 வந்தபிறகுதான் தண்ணீர் கஷ்டம் என்கிற சொல்லையே முதல்முறை கேட்க ஆரம்பித்தேன். அரைவாளி தண்ணீரில் குளித்துவிட்டு அலுவலகம் சென்ற நாட்களுமுண்டு. ஆற்றில் நீச்சலடித்துக் குளித்து வளர்வதால் எங்களுக்கு தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். அதனால் தண்ணீர் லாரி வராத நாட்களில் வேறுவழியின்றி அலுவலகத்திற்கு விடுப்பு போட்டதுமுண்டு. என்ன நடந்தாலும் குடிநீர் மட்டும் கூடியவரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பெரிய உணவு விடுதிகளுக்குச் சென்றாலும் முடிந்தவரை இதைக் கடைபிடிப்பதுண்டு. தண்ணீரெல்லாம் காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை வருமென்று உங்களைப்போலவே நானும் நினைத்திருக்கவில்லை. தவிர்க்கமுடியாத வேளைகளில் காசுகொடுத்து குடிநீர் வாங்கி அருந்தும்பொழுது, நான் மேற்சொன்ன மொத்த நினைவுகளும் அந்நீரின் வழியாக உள்ளிறங்கும்.
நேற்றிரவு வாங்கி அருந்திய பன்னாட்டு நிறுவனக்குடிநீரும் அதே வேலையச்செய்ய, பழைய நினைவுகளுடனே வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தேன். வெளியே மழையின் ஆரம்பத்துளிகள் பூமியில் விழும் சத்தம் கேட்டது. மழை விழுந்தாலும், குளிப்பதற்கு ஆறுகள் இல்லாத ஊரில் மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை. தூக்கம்பிடிக்க நேரமானது. நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் உறங்கத்துவங்கினேன்.
உறங்கிய சிலநொடிகளில் வழக்கம்போல் கனவு. கட்டம்போட்ட துண்டைக் கட்டிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று பாம்பூரி ஆற்றில் குதித்தேன். நான் ஆற்றை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
ஆறு பொங்கி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது!!

இளையராஜாவின் பாடல்களா இல்லை?!

கேட்பதற்கு
இளையராஜாவின்
பாடல்களா இல்லை?!
ஏன் மரித்துப் போகிறீர்கள்!?

நான் ஒருபோதும் மனிதர்களிடம்
தஞ்சம் புகுந்ததில்லை
முன்வரும் தேற்றுதலில் மகிழும் மனம்
பின்வரும் நிராகரிப்பை ஏற்காது
இசையில் தஞ்சமடைந்து விடுகிறேன்

கொடுமையான
இரவுகள் உயிரைப்பறித்து விடும்
தாமதிக்காமல் கொஞ்சம்
இசை கேட்டுவிடுகிறேன்

உறவுகள் ஒருபோதும் உயிரை காக்காது
காவுவாங்கவே காத்திருக்கும்
எப்பொழுதும் ஒதுங்கியே நிற்கிறேன்
முப்பொழுதும் இசை கேட்கிறேன்

காதல் நட்பு பாசம் காமம்
என்ன வேண்டுமானாலும்
பெயர் வைத்துக் கொள்ளுங்கள்
எழுதித்தருகிறேன் உத்தரவாதமில்லை
வாழ்வதற்கான மந்திரவாதம்
இசையில் உண்டு
தினமும் கேட்கிறேன்

உயிர் துறப்போர் கோழைகளில்லை உச்சகட்ட துணிச்சல் அது 
ஆனாலும் உச்சம் தொடுதல் ஆபத்தானது
உச்சங்கள் மறுநொடியில்
கீழே தள்ளிவிடுகிறது
இசையின் உச்சத்தைத் தவிர
நான் இசையில் மட்டுமே உச்சம் தொடுகிறேன்

ஒருபோதும் மனிதரிடத்தில்
ஆறுதல் தேடாதீர்கள்
மரித்துப்போவீர்கள்
ஆறுதல் தேடும் நேரத்தில் 
இசை கேட்டால் வாழ்ந்து விடுவீர்கள்
நான் இன்னும் மரிக்காமல்
வாழ்கிறேன் என்பதே
அதற்கான சாட்சி

எல்லா உணர்வுகளுக்கும்
இசை இங்குண்டு
மரிக்கத்தூண்டும்
உள்ளுணர்வுக்கும் உண்டு
இசையில் இத்தனை இருந்தும்
ஏன் மரித்துப் போகிறீர்கள்!?
கேட்பதற்கு
இளையராஜாவின்
பாடல்களா இல்லை?!!

விஷன்.வி

கடவுளின் எண்!

முன்பொருமுறை கடவுளின் தொலைபேசி எண் கிடைத்து
நான் அழைத்தபோது அது
தொடர்பு இலக்கை விட்டு
வெளியே இருந்தது...
இந்நள்ளிரவில் மீண்டும் முயற்சி செய்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் கடவுளிடம்!

அங்கே இப்போது பகலாம்..
சொர்க்கத்துக்குச் சென்றவரில் பலர் வயதாகி இறந்துவிட கூட்டமின்றி குதூகலமின்றி இருக்கிறதாம் சொர்க்கம்...
வருந்துகிறார் கடவுள்!

பூமியிலிருந்து கடைசியாய் சொர்க்கம் வந்தவர் யாரெனக் கேட்டேன்..
ஒரே பள்ளியில் பயின்று ஒரே நாளில் மாண்டுபோன
தமிழ் பேசும் சில குழந்தைகள் என்றார்..
அழுதார் கடவுள்!

மனைவி உணவருந்த அழைப்பதாகச் சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டார்!
அவரின் பெயர் கேட்க மறந்து விட்டேன்..
அடுத்தமுறை பேசும்போது மறக்காமல் பெயர் கேட்டு உங்களுக்குச் சொல்கிறேன்
அதுவரை மதம் மறந்து
ஜாதி துறந்து மகிழ்ந்திருங்கள்!!

விஷன்.வி

மீண்டு வந்திருக்கிறேன்!

அதிகம் பயணப்படுவதில்லை நான்..
ஆனால் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறேன்..
என்னை இன்னும் பயணப்பட சொல்லாதீர்கள்..
என்னுள்ளே நான் பயணிக்கத் துவங்கி வருடங்கள் பல ஆயிற்று..
இப்பயணம் நீங்கள் பிரபஞ்சம் முழுக்கச் சுற்றி வரும் தொலைவையேத் தாண்டும்..
இப்பயணத்தில் இதுவரை நான் கடந்து வந்த அத்தனை பேரையும் இறங்குமுக வரிசையில் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறேன் ..
நண்பர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்
தோழிகள் அனைவரும் நலம் விசாரிக்கின்றனர்
உறவினர்கள் அனைவரும் சபிக்கின்றனர்
கடன் வாங்கியவர்கள் ஒளிந்து கொள்ள, கடன் கொடுத்தவர்களோ துரத்துகின்றனர்..
ஓடிச்சென்று நான் குதித்தது மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் செம்மண் நிறத்தில் பாய்ந்தோடும் எங்கள் ஊர்  ஆற்றில்!!!
பல வருடங்களையும், வடுக்களையும் தாண்டி என் பள்ளிப்பருவத்தில் வந்து நிற்கிறேன் என்று புரிகிறதெனக்கு..
நான் படித்த இரண்டாம் வகுப்பிற்குள் நுழைகிறேன்..
என் தாயின் சாயலை ஒத்த
அதே கன்னியாஸ்திரி அங்கே
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்..
என்னைக் கண்டதும் எனது பெயர் சொல்லி உள்ளே வா என்கிறார்..
அவரைவிட அழகாக எனது பெயரை இதுவரை எவரும் உச்சரித்ததில்லை..
இனி நான் திரும்புவதாயில்லை...
என்னை அங்கேயே தங்கிவிட அனுமதியுங்கள்..
மூன்றாம் வகுப்பிற்கு போக மாட்டேன் என்று அழுது அடம்பிடித்த சிறுவன் நான்.
என்னை ஏமாற்றி அனுப்பி வைத்தீர்கள்
இன்று முழுதாய் ஏமாந்து மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன்
இனி ஏமாற நான் தயாராயில்லை
என்னை அங்கேயே தங்கிவிட அனுமதியுங்கள்!!

விஷன்.வி

காதல் கதை!

என்னை இயல்பாய் கடந்து சென்றாள் அவள்
அவள் கண்களை இயல்பாய் நோக்கினேன் நான்!!
அதற்கு முன் அவளை நான் கண்டிருக்கவில்லை!
ஆனால் அந்தக் கண்களை இதற்குமுன் எங்கோ கண்டிருக்கிறேன்!!
அன்றிரவு நான் உறங்கவில்லை
விடியும்போது தெளிவாகியிருந்தேன்
கண்களை மட்டுமல்ல அவளையே நான் எங்கோ சந்தித்திருக்கிறேன்!!
அடுத்தடுத்த தினங்களில் அவள் என்னை கடக்கும்போதெல்லாம் அவளோடு சேர்த்து அவள் கண்களையும் நோக்கினேன்
இருந்தும் நினைவு வரவில்லை
ஒருவேளை அவளுக்கு நினைவிருக்காலாம் என்றெண்ணி அவளிடம் பேசத் தொடங்கினேன்
நாட்கள் கடந்தது.. யாரவள் என்பது மட்டும் பிடிபடவில்லை
யாரவள் என்பதற்கான விடை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியும் எனப்புரிந்து கொண்டேன்..
சில நேரங்களில் அவளிடம் எதுவும் பேசாமல் அவள் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன்
என்னவென்று கேட்கும் அவளிடம் ஒன்றுமில்லையென தலையசைப்பேன்
இப்பொழுது நாங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தோம்
ஒருநாள் என் நீள முத்தத்தில் மயங்கிப் போயிருந்தாள் அவள்..
அவளின் அம்மயக்க நிலையில் என் விடைதேடி அவள் கண்களுக்குள் நுழைந்தேன்!
அவள் கண்களின் பின்பகுதி அலையற்ற கடல்போல காட்சியளித்தது
நீந்திச் சென்றேன்
யாரவள் என்பதன் விடை அறிந்தேன்
அவள் கண்ணீர் கடலில் நீந்திக் கரையேறினேன்!!
அப்போதும் அவள் மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை!
மொத்தமாக நான் வெளியேறி விட்டேன்!
அவள் கண்களுக்குள் நான் கண்ட கண்ணீர் கதை இந்தப் பிறவியிலும் தொடர வேண்டாம்!!

விஷன்.வி

அழுகின்ற அரசன்!

அவன் அரசன்!
முன்னொரு பிறவியில் அவன் அரசன்!
என்றோ நீங்கள் நிறுவிய அவனது சிலையை இப்பிறவியில் பார்த்துக்கொண்டே கடக்கிறான்!
மீண்டும் அவ்வுலகிற்கு செல்லும் ஆராய்ச்சியில் அவன்!
அது நிறைவேறாது என்றுணரும் தருணங்களில் அழுகிறான்
ஆயிரம் ஆண்டுகளாக சேர்த்து வைத்த கண்ணீர் அருவியாகக் கொட்டித்தீர்க்க
அதில் நீந்திச் செல்கிறான்
அவனுலகம் நெருங்கும் வேளையில் வற்றி விடுகிறது கண்ணீரருவி!
என் தாய்மண்ணில் கொண்டு சேர்த்து விடுங்கள் என்னை
மனிதனாகக் கூட வேண்டாம் புரவியாய் அம்மண்ணில் புரண்டு கிடக்கிறேன்
என வேண்டி அழுகிறான் அவன் கட்டிய ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அய்யனிடம்! முன்ஜென்மத்துப் போரில் தான் கொண்ட விழுப்புண்களைக் காட்டுகிறான் அசைவற்ற அய்யனிடம்!
பயனில்லையென உணர்ந்தவன் மாண்டுவிடலாம் வரும் ஜென்மத்தில் மீண்டும் அரசனாகலம் என்றெண்ணி மலையிலிருந்து குதிக்கிறான்!
தீராத சாபம் விடாமல் தொடர
இப்பிறவியில் கவிதை எழுதுகிறான் அரசன்!!

விஷன்.வி

புத்தரின் கண்ணீர்

எப்போதாவது எனைத் தேடிவரும்
புத்தர் இப்போது தினமும்
வரத் தொடங்கியிருக்கிறார்
நிம்மதியான உறக்கம் வரவில்லை என்பதே அவர் வருகைக்கான காரணம்
சிறுகுழந்தை போல் கதைசொல்லச் சொல்லி அடம்பிடிக்கும் புத்தர் ஆரம்பத்தில் கேட்க மறுத்து
இப்போது காதல் கதைகளையும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்!
முதல்முறை அவளைப் பார்த்தவுடன் அன்று என் உள்ளுணர்வு சொன்னதை சன்னமாய் இன்று அவர் காதில் சொன்னேன்
மய்யமாய் சிரித்தவர் செல்லமாய்
என் காதைத் திருகினார்
உள்ளுணர்வில் துவங்கி உயிர்வரை கலந்த காதல் கதையை நான் சொல்லச்சொல்ல மலைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்
உயிரைப் பிழிந்து வெளியேறிய அக்கதையின் முடிவை நான் சொன்னதும் கண்ணீர் சிந்தினார்
இருளில் அவர் சிந்தும் கண்ணீர் துளிகள் கரும்பாறையிலிருந்து வடிந்திறங்கும் அருவியின் துளிகளாய் மின்னியது
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர்
நாளை உனக்கோர் கதை சொல்கிறேன்
இன்றிரவு உனக்கும் சேர்த்து நான் உறங்குகிறேன் என்றார்
சில நிமிடங்களில் உறங்கிப் போனார் 
வழிந்தபடியே இருந்தது அவரின்கண்ணீர் துளிகள்..
உனக்கும் சேர்த்து நான் அழுகிறேன் எனச் சொல்லவில்லை அவர்..!

விஷன்.வி

கனவு!

வாரம் தவறாமல் வரும் கனவில்
பாய்மரக் கப்பல் ஒன்றிலேறி
நடுக்கடலில் சென்று குதிக்கிறேன்
கடலின் அடியில் நீந்திச் சென்று
அங்கிருக்கும் மாநகரம் ஒன்றைக்
கண்டு வியக்கிறேன்
கருப்பும் சிவப்பும்
உயரமும் குள்ளமுமாய் மக்கள்
உலாவிக் கொண்டிருக்கும்
அந்நகரத் தெருக்களில் நடந்து அரண்மனை ஒன்றினுள் நுழைகிறேன்
அரண்மனையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எவர் கண்ணுக்கும்
நான் தெரியவில்லை..

அரசவை கூடியிருக்கிறது
யாருக்கோ காத்திருக்கின்றனர் அனைவரும்...
கூடவே சிம்மாசனமும்..
சிம்மாசனத்தைக் கண்டவுடன்
என் நடையும் பாவனையும் மாறுகிறது
சென்றமர்கிறேன் சிம்மாசனத்தில்.
அமைதியாகிறது அரண்மனை.

பணிவாய் எனைநோக்கி நடந்து வரும் போர்வீரன் திடீரென தன் இடுப்பிலிருந்து
வாள் ஒன்றை  ஆவேசமாக உருவுகிறான்
பதறி எழுகிறேன் உறக்கத்திலிருந்து...

முன் ஜென்மத்தில் அந்நகரத்தில் பிறந்திருப்பேனோ?
ஓர் ஆழிப்பேரலையில் உயிர் துறந்திருப்பேனோ?!
கேட்டேன் நண்பனிடம்
உனக்கு பைத்தியம் என்றான் அவன்.
இருக்கலாம்...

விஷன்.வி

புன்னகை - சின்னஞ்சிறு கதை

தகப்பன் இல்லாத வீடு அது. தன் தாயாருக்கும், இளைய சகோதரிக்கும் தாயுமானவனாக இருந்த அந்த  இளைஞன் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறான். இறந்தவனை கல்லறையில் புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்து அழுது தீர்த்துவிட்டு உறங்கி விடுகின்றனர் இருவரும்.

நள்ளிரவு...

வீட்டின் காம்பவுண்ட் கதவை யாரோ திறக்கின்றனர். அந்த இரும்புக்கதவு சத்தமிடுகிறது. சத்தம் கேட்டு உறக்கம் கலைந்த சகோதரி, படுக்கையிலிருந்து எழுந்து கண்ணாடி சாளரம் வழியாகப் பார்க்கிறார். யாரோ ஒரு ஆண்மகன் திறந்த கதைவை மூடிவிட்டு வலதுபக்கம் தோட்டம் இருக்கின்ற பகுதியை நோக்கி நடக்கின்றான். இருளில் அவன் முகம் தெரியவில்லை. இவள் பயத்தில் தாயை எழுப்புகிறாள். அவள் எழும்புவதாயில்லை. மீண்டும் பயந்தபடியே அவனைப் பார்க்கிறாள். அவன் கொஞ்சதூரம் நடந்து, அங்கிருக்கும் கிணற்றுக்கு முன்புசென்று நிற்கிறான். இவளுக்கு பயம் அதிகமாகிறது. தெருவிளக்கின் வெளிச்சம் கிணறு இருக்கும் பகுதியில் விழுவதால் அவனின் உருவம் ஓரளவுக்குத் தெரிகிறது. திரும்பிநிற்பதால் முகம் தெரியவில்லை. கிணற்றிலிருக்கும் வாளியைக்கொண்டு நீர் இறைக்கிறான். அந்நள்ளிரவில் அந்தச் சத்தம் இவளின் பயத்தை அதிகமாக்குகிறது. மீண்டும் தாயை எழுப்புகிறாள். அவன் குளிக்கும் சத்தம் கேட்கிறது. தாய் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு மீண்டும் உறங்குகிறாள். இவள் மீண்டும் பயத்தோடு அவனைப் பார்க்கிறாள். ஒரு வாளித் தண்ணீரை தன் தலையில் ஊற்றிவிட்டு மெதுவாகத் திரும்பி இவளைப்பார்த்து அவன் புன்னகை செய்கிறான்.

மறுநாள் மாலை...

அண்ணனின் கல்லறைக்கு அருகே தோண்டப்பட்டிருந்த குழியில் இவளது உடலை சவப்பெட்டியோடு உறவினர்கள் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
அருகே நின்று துயரம் தாங்காமல் அழுதுகொண்டிருந்த தாயைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவளது மகன். அவன் உதடுகள் புன்னகைத்தபடியே இருந்தது.
அந்தப் புன்னகை கடந்த இரவு தன் சகோதரியைப் பார்த்துப் புன்னகைத்ததை  ஒத்திருந்தது. இன்றிரவும் அவன் தன் வீட்டில் குளிக்கச் செல்லலாம்.

விஷன்.வி

வாழ்வியல் சினிமா?

வாழ்வியல் சினிமா?

"மேற்குத்தொடர்ச்சி மலை" திரைப்படம் பார்த்தேன். படம் இத்தனை அற்புதமாக வந்ததற்கு, இயக்குனர் லெனின் பாரதி அந்த நிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதே முக்கியக் காரணமாக இருக்க முடியும். இல்லாவிட்டால் கடலோர கவிதைகள் திரைப்படத்தில், அலையடிக்கும் இடத்தில் குதித்து ஒரு வஞ்சிரம் மீனைத் தூக்கியபடி சத்யராஜ் எழும்புவதுபோல் இருந்திருக்கும்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், நெய்தல் நிலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல அபத்தமான  திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன என்பதுதான்.
படத்தின் வெற்றிதோல்விக்கு அப்பாற்பட்டு, மீனவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மிகமோசமான எண்ணத்தை இதர மக்களுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் நம் தமிழ் இயக்குனர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழ் சினிமாவில் நம்மை மிகவும் தவறாக சித்தரிக்கிறார்களே என்று அடிக்கடி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அதை நீங்கள் புரிந்துகொள்வது கடினம். ஒரு மனிதனின் அடையாளத்தை அளிப்பதைவிடக் கொடுமையானது தவறாக அடையாளப்படுத்தப்படுவது. கடற்கரையில் அமர்ந்துகொண்டு எல்லோரும் பார்க்கும்படி நாங்கள் மது அருந்தினால் வீட்டில் இடம் கிடைக்காது. தகப்பனார்கள் பார்த்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் நீர்ப்பறவை விஷ்ணுவும், மரியான் தனுஷும் அதை தினமும் செய்வார்கள்.
பாறைகளின் நடுவே ரொமான்ஸ் செய்வதும், கடற்கரையில் காதலியுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் அங்கே நடக்காத காரியம். என் பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள். கடற்கரையில் அவர்கள் சேர்ந்தார்போல் நடந்துசென்று இதுவரை நான் பார்த்தது கிடையாது.
மீன் வியாபாரம் செய்யும் வயதான பெண்களைத் தவிர்த்து வேறு எந்த பெண்களும் கடற்கரைக்கே வருவதில்லை. ஆலயத்திருவிழாக்களின்போது கடற்கரையில் மேடை அமைத்து நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு மட்டுமே குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள். கடற்கரையைக் காண்பதற்கு அதுதான் வாய்ப்பு அவர்களுக்கு. ஆனால் "சோனாப்பரியா..  சோனாப்பரியா" என்று தனுஷும் பார்வதியும் கடற்கரையில் நடனமாடுவார்கள். கார்த்திக், ராதாவை துரத்திக்கொண்டு ஓடுவார். ரேகா, சத்யராஜுக்கு கடற்கரையில் அமர்ந்து பாடம் நடத்துவார்.

"முட்டம்" என்கிற ஊரை, படாதபாடு படுத்தியதில் பாரதிராஜாவுக்கு அதிக பங்குண்டு. ஆனால் நிஜத்தில், அந்த ஊருக்குச் சென்று ஒரு சின்னப்பத்தாஸை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் மாவட்டத்துக்கும் சங்கீத வகுப்புகளுக்கும் இன்றுவரை சம்மந்தம் கிடையாது. ஆனால் கார்த்திக்கின் வீட்டில் எண்பதுகளிலேயே ராதா சங்கீதம் கற்கச்சென்றது எப்படியோ?!!
தவறாக, ஏதோ ஒரு தமிழ் பேசுவது, ஆழ்கடலுக்குள் குதித்து ஈட்டீயால் குத்தி மீன்பிடிப்பது என்று மொழியையும், தொழிலையும், வாழ்வியலையும் தவறாகக் காட்டி சம்பாதித்ததோடு, மீனவர்கள் குறித்த மிகத்தவறான பிம்பத்தையும் உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள் நம் இயக்குனர் இமயங்கள்.

எல்லா மக்களின் வாழ்வியலும் இங்கே திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அது சரியாக காட்டப்பட வேண்டுமே?!! 
அதற்கு பெரிய மெனக்கெடலும், முன்தயாரிப்பும் வேண்டும். அதை லெனின் பாரதியிடம் பிற இயக்குனர்கள் கற்றுக்கொள்ளுங்கள். அடிப்படை தேடல்கூட இல்லாமல் படம் எடுக்க மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது?!! ஒரு கலைஞனுக்கு சாமானியனைவிட கூடுதல் சமூகப்பொறுப்பு வேண்டுமல்லவா?! நான் நியாயமாகக் கேட்கிறேன். என்னைவிட நல்ல தமிழ் தெரிந்தவர் யாரேனும் வந்து அசிங்கமாகக் கேட்கும் முன்னர் தேடலைத் தொடங்குங்கள்.
வெறுமனே ஒரு காதல் கதையைத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி வராதீர்கள்! கழுத்தில் கல்லைக்கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிடுவோம்!!

விஷன்.வி

உலகின் மிகச்சிறந்த காதலி

உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் வேறு யாரைச்சொல்வேன்?!காதலனின் கால்களை
நறுமணத்தைலத்தால் கழுவி
அவள்தன் கூந்தலால் துடைத்தது பெண்ணடிமைத்தனம் அல்ல.
பேரன்பு அது!
போராளியை இறுதிவரை பின்தொடர்வது சுடுவெப்பம் மனதைத் துளைப்பதைப் போன்றது.
அதைத் தாங்கிக்கொண்டு
அன்பை மட்டுமே அவனுக்களித்தது அதிசயக்காதலின் வெளிப்பாடு.
உயிருக்கு நெருக்கமானவன் வினைசூழ்ந்து சிலுவையில் அறையப்படும்போதும் பயந்துருகி விலகிச்செல்லாமல் உடன் பயணிக்க அவள் பெருங்காதல் கொண்டிருக்க வேண்டும்.
தன்னவன் உயிர் துறந்ததும் அழுதுதீர்த்து பின் மறந்துபோகாமல் அவனை உயிர்ப்பித்து கடவுளாக்க அவள்பட்ட பெரும்பாட்டை எழுத தனி விவிலியம் தேவைப்படும்.
எல்லாம் நிறைவேறி,
இறுதியில் அவனைக் கடவுளாக்க,
அவள் விபச்சாரியாக்கப்பட்டாள்.
அவளின் மொத்தக்காதலும் சுத்தமாய்  மறைந்துபோனது வரலாற்றுப்பிழை.
அந்தப் பேரழகியின் அத்துணை பேரன்பில் ஒற்றைத்துளியேனும் இங்கே தெளிக்கப்பட்டிருக்கலாம்தான்.
மார்க்ஸின், ஜென்னிக்கு கிடைத்தப் புகழேனும் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும்தான்.
உலகின் எல்லா சிறந்த காதலர்களுக்கும்
நேர்கிற பெருஞ்சோகத்தில் ஒன்றாய் இதனையும் கடந்துவிட முயற்சிக்கிறேன்
இரவுதோறும் என் தலைமாட்டில் கேட்கும் அழுகைச்சத்தத்தால் அது முடியாமல்போக அவளுடன் சேர்ந்து நானும் அழுகிறேன்.
உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் அவளையன்றி வேறு யாரைச்சொல்வேன்?!

விஷன்.வி

96 - எதற்கு ஆராய்ச்சி?

ஒரு திரைப்படத்தை இத்தனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ராம் வாழத்தெரியாதவன் என்கிறார்கள். இப்படியெல்லாம் கன்னித்தன்மை கழியாமல் வாழவேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறார்கள்..
வழக்கம்போல நம் பெண்ணியவாதிகள்,  ஒருவித தீவிரக்காதலை ஜானுவின் மீது செலுத்தி அவளை மனதளவில் இவனுக்கு அடிமையாக்க முயற்சிக்கிறான் என்கிறார்கள்.
இன்னொரு கூட்டம் ஜானுவின் சாதியை ஆராய்ந்து அவள் பார்ப்பன  பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். மறைமுகமாக பார்ப்பனியத்தை படத்தில் திணித்திருக்கிறார்கள் என்கிறது.
ஆண்பெண் உறவை புனிதப்படுத்தி மீண்டும் நம் சமூகத்தை பின்னோக்கி இழுக்க முயற்சித்திருக்கிறார்கள் எனக் கூவுகிறது போராளிக்கூட்டம்.

இதையெல்லாம் பார்க்கும்போது தலைவன் கவுண்டமணி, செந்திலிடம் கேட்பது போல் "இப்டியெல்லாம் பேசச்சொல்லி எவன்டா உனக்கு சொல்லித் தர்றான்" என்று கேட்கத் தோன்றுகிறது.

நம் முதல் காதலை எப்போதும் மறக்கமுடியாது என்கிறோம் நாம். ஆனால் வாழ்நாள் முழுக்க அந்த முதல்காதலையே ஒருவன் நினைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் என்று 96 படத்தின் இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். அதை அவர் கதையாக எழுதியிருக்கிறார். அந்தக்கதையை படமாக எடுத்திருக்கிறார்.
தொலைந்த அல்லது தொலைத்த நமது காதலையெல்லாம் நம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றிபெற்றிருக்கிறார். ஜானுவுக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். 22 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும். அப்போதுவரை, ராம் வேறுயாரையும் காதலிக்காமல், குறிப்பாக கன்னித்தன்மை கழியாமல் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். இதில் சேதுவும் த்ரிஷாவும் நடிக்க வேண்டுமென்றும் அவர்தான் விரும்பியிருக்கிறார்.
பசங்க 2 திரைப்படத்தில் "இது என்னோட கதை மிஸ். இதுல யாரு என்ன பண்ணணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்" என்று ஒரு குழந்தை சொல்லுமே ஞாபகமிருக்கிறதா?!!
அதேபோல் இது இயக்குனரின் கதை. இதில் யார் என்ன செய்ய வேண்டுமென்று அவர்தான் முடிவு செய்வார். நாம் விரும்பினால் பார்க்கலாம். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் என்கிற பெயரில்,  நீங்களாக ஒன்றை அபத்தமாக அனுமானித்துக்கொண்டு, உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டும் முயற்சியில் நான் மேலே சொன்னபடியெல்லாம் யோசித்து எழுதுவது பெரும் அபத்தம்.

பிரான்சில் உலகத்தரமான திரைப்படங்கள் வந்ததன் பின்னணி தெரியுமா?!! 
இப்படி விமர்சிக்கிறீர்களே,,, உங்களால் ஒரு நல்ல திரைப்படம் எடுக்க முடியுமா என்று அங்கிருந்த இயக்குனர்கள் கேட்டதும், அந்த விமர்சகர்கள் களமிறங்கி எடுத்த திரைப்படங்கள்தான்  உலக சினிமா அரங்கில் பிரெஞ்சு திரைப்படங்களுக்கு தனிமரியாதையை உருவாக்கித்தந்தது.
முகநூல் விமர்சகர்களே!! இப்படியொரு கேள்வியை நம் இயக்குனர்கள் உங்களைப் பார்த்துக்கேட்டால் என்ன செய்வீர்கள்?!! மூடிக்கொண்டு இருக்கவேண்டி வருமல்லவா?!!
அதனால படத்தை ரொம்ப ஆராயாதீங்க... நீங்க அறிவாளிங்கதான்னு நாங்க ஒத்துக்குறோம்!! முடிஞ்சா கொஞ்சம் அனுபவிங்க!!
நீங்கள் அனுபவிக்கவில்லை என்றாலும் குறையொன்றுமில்லை. படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஷன்.வி