மலையாள நடிகர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள்?!



"தமாஷா" திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கேரளாவில் இருக்கும் இயக்குனர்கள் தங்களின் கதாபாத்திரத்துக்காக எப்படிப்பட்ட நடிகர்களை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாலசந்தர், நாகேஷ் கூட்டணியில் வந்த திரைப்படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழில் சப்பாணியாக நடிப்பதற்கும், கண் பார்வையற்றவராக நடிப்பதற்கும், மனநலம் குன்றியவராக நடிப்பதற்கும், நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு கதாநாயகனே தேவைப்படுகிறார். அவர் அழகானவராக இருந்தால் இதுபோல் பாத்திரங்களுக்காக கஷ்டப்பட்டு அவரது அழகையும் குறைக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு பதினாறு வயதினிலே, காசி, குணா போன்ற படங்களைச் சொல்லலாம்.

ஆனால் மலையாளத்தில் வேறொன்றைச் செய்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான கதாநாயகர்களை தேடுவதற்குப் பதிலாக நடிகர்களைத் தேடுகிறார்கள். அவர் நகைச்சுவை நடிகரா, வில்லனா, சிறிய கதாபாத்திரங்கள் செய்கிற நடிகரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பொருந்திவரும் பட்சத்தில் அவர்களையே கதாநாயகனாக நடிக்க வைக்கிறார்கள்.

சரி. அதனாலென்ன என்று கேட்கிறீர்களா?!

அதனால் என்னவென்றால் கலாபவன் மணி, சலீம், சுராஜ் வெஞ்சிரமூடு, செளபின், விநாயகன் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் அங்கே உருவாகிறார்கள். அந்த வரிசையில் நாம் பிரேமம் படத்தில் பார்த்த 'வினய் ஃபோர்ட்' இந்த தமாஷா படத்தின் மூலமாக அற்புதமான நடிகராக, கதாநாயகனாக மாறியிருக்கிறார். இதனால் ஒரு கதாநாயகனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் அங்குள்ள படைப்பாளிகளுக்கு இல்லாமல் போகிறது. ரசிகர்களுக்கும் புதிதான அனுபவங்கள் கிடைக்கிறது. நாம் சாலையில் காண்கிற சாதாரண மனிதர்களின் கதைகள்கூட திரைப்படமாகிறது.

இதில் நான் சொன்ன கலாபவன் மணி, சலீம், சுராஜ் வெஞ்சிரமூடு, செளபின் ஆகிய நால்வரும் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள். விநாயகனும்தான். பின்னாளில் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்தார்கள். செளபின் தற்போது படத்துக்குப் படம் காட்டிக் கொண்டிருக்கிற அபிநயத்தை எந்த வகையறாவில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கடைசியாக வைரஸ் திரைப்படத்திலும் மாயமொன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது கும்பளாங்கி நைட்ஸ் பற்றியும், சுடானி From நைஜீரியா பற்றியும் எழுதுவதற்கு நூறு பக்கங்கள் தேவைப்படும். "கம்மட்டிப்பாடம்" விநாயகனை காலத்துக்கும் மறக்க முடியாது. இயக்குனர் வினயனுக்கு ஒரு ஏழை குருடனாக நடிப்பதற்கு அதுவரை அங்கே நகைச்சுவை நடிகராக இருந்த கலாபவன் மணி போதுமானவராக இருந்தார். ஆனால் இங்கே அவருக்கு விக்ரம் தேவைப்பட்டார். கலாபவன் மணி செய்த பாத்திரங்களை என்னால் செய்ய முடியாது என்று மம்மூட்டி ஒரு மேடையில் சொன்னார் என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

இதில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது நமது படைப்பாளிகள் இதுபோல் ரிஸ்க்கெல்லாம் எடுக்க விரும்புவதில்லை. இரண்டாவது நாமும் அத்தனை எளிதாக எல்லோரையும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அப்படம் ஒரு பெரிய இயக்குனரால் எடுக்கப்பட வேண்டும். குற்றம் சொல்வதற்கில்லை. திரையரங்கம் செல்வதற்கு நமக்கு மினிமம் கியாரண்டியாக யாரேனும் தேவைப்படுவது ஒன்றும் தவறல்ல. ஆனால் நம் பெரிய இயக்குனர்கள், பெரிய கதாநாயகர்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஒன்றிரண்டு பேர் இங்கேயும் மலையாள இயக்குனர்களைப்போல செய்ய முன் வந்தார்கள். "சொல்லாமலே" திரைப்படத்தில் லிவிங்ஸ்டனை நாயகனாக்கிய இயக்குனர் சசியைப்போல. அந்த வகையில் "எட்டு தோட்டாக்கள்" தமிழில் ஆச்சரியமான படைப்புதான். மேலும் ஆச்சரியங்களை நிகழ்த்த இங்கே இளம் படைப்பாளிகள் வந்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். காலமும், கலையும் இரு கரங்களை விரித்தபடி உங்களை வரவேற்க காத்திருப்பதாகவே உணர்கிறேன். ரசிகர்களும்தான்!

மலையாளத்தில் இனி வினய் ஃபோர்ட் நிகழ்த்தவிருக்கும் ஜாலங்களைக் காண உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.

விஷன்.வி

No comments:

Post a Comment