இராப்பாடி

இரவு முழுக்க உறங்கவில்லை.  இது புதிதுமில்லை. சிறுவயதிலேயே இந்த இரவுறங்காப் பழக்கத்துக்குப் பழகிவிட்டேன். முன்னிரவை வாசித்தும், பின்னிரவை எழுதியும் கடப்பதில் ஒரு சுகம் உண்டு. உறங்காமல் கழித்த இரவு, விடியத்தொடங்கியதும் நடந்துவந்து எலுமிச்சைத்தேனீர் பருகுவதில் பெரும்சுகம் உண்டு. நீண்ட காத்திருக்குப்பின் பருகும் இதழ் போல! உள்ளே செல்லும் தேனீர் வெளியே கொண்டுவரும் நினைவுகளின் சுவையைச் சொல்லிமாளாது. இதுபோல் இரவு முழுக்க உறங்காமல் சுற்றித்திரிபவர்களை ஊர்ப்பக்கம் "இராப்பாடி" என்பார்கள்.
மனம் இணையஇதழில் பணியாற்றத் துவங்கிய நேரம். இரவுநேரப் பணியாளர்கள் பற்றிய தொடர் ஒன்று எழுத வேண்டுமென ஆசிரியர் சொன்னதும், இராப்பாடி என்று பெயர் வைக்கலாம் என்றேன். எழுதவும் செய்தேன். சிறுவயதில் நான் பார்த்த "ஆகாஷ தூது" என்கிற மலையாளத் திரைப்படத்தில் "இராப்பாடி கேளுந்துவோ" என்ற அற்புதமான பாடல் ஒன்றுண்டு. மலையாளத்திரையுலகம் இருக்கும்வரை, இந்தப்பாடலைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். நான் முதன்முதலில் இராப்பாடி என்கிறச்சொல்லை இப்பாடலில்தான் கேட்டிருக்க வேண்டும்.
எங்கள் ஊரின் பெரும்பான்மையான வீடுகளில் தொலைக்காட்சிப்பெட்டி நுழையாத காலகட்டம் அது. அவ்வப்போது டிவி, வீடியோ கேசட், வி.சி.ஆர் போன்ற வஸ்துக்களை வாடகைக்கு எடுத்து நீளமான திண்ணை இருக்கும் வீடுகளில் படம் போடுவார்கள். இரவு எட்டு மணியளவில் ஏதாவதொரு ஆட்டோ, நான் மேற்சொன்ன வஸ்துக்களை ஏற்றிக்கொண்டு போகும். சிறுவர்களான நாங்கள் அந்த ஆட்டோவின் பின்னால் ஓடி, அது சென்றுநிற்கும் தெருவை உறுதிசெய்துவிட்டு வருவோம். முடிந்தால் எந்த திரைப்படம் என்பதையும் அங்கேயே உறுதிசெய்து கொள்வோம். பின்னர் வீடுவந்து இரவு உணவை முடித்துக்கொண்டு, கையில் ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு அந்த தெருவுக்குச் சென்று டிவிக்கு மிகஅருகில் அமர்ந்து படம் காணவேண்டியதுதான். என் தந்தையார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்பதால் எனக்கு எப்போதாவதுதான் இதுபோல் படம் காண்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி ஒருமுறை கிடைத்த வாய்ப்பில் பார்த்த திரைப்படம்தான் ஆகாஷ தூது! இந்த திரைப்படத்தைப் பார்த்து யாரேனும் அழாமல் இருந்துவிட்டால் அது உலக அதிசயத்தில் சேரும்! அன்று என்னருகில் அமர்ந்து இப்படத்தைப் பார்த்து அழுதுகொண்டிருந்த பால்யநண்பர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். படத்தின் இடைவேளையிலிருந்து ஒவ்வொருவராக அழ ஆரம்பித்தனர். அப்போதே கல்நெஞ்சக்காரனாக இருந்த நான், கடைசிவரை அழாமல் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தேன். ஊனமுற்ற குழந்தை ஒன்று நாதியற்று நிற்கும் படத்தின் இறுதிக்காட்சியில் ஒட்டுமொத்த கூட்டமும் சத்தமாக ஒப்பாரிவைக்க, தேம்பித்தேம்பி அழத்தொடங்கினேன் நான். அன்றிரவும் இன்றுபோல் நான் உறங்கவில்லை.
இரவு முழுக்க உறங்காமல் பாடித்திரியும் பறவைக்கு இராப்பாடி என்று பெயர். தேன்சிட்டு என்பார்கள் தமிழில். நள்ளிரவில் வீட்டின் முன்வந்து நின்று "ஜக்கம்மா வந்திருக்கா" என்று குறிசொல்லும் சாமக்கோடாங்கிகளுக்கும் இராப்பாடி என்கிற பெயர் உண்டு. எனக்கும் உண்டு.
நீங்களும் அவ்வப்போது இராப்பாடிகளாக வாழ்ந்து பழகுங்கள். இதுபோல் அழகான நினைவுகளில் கரையவும் கற்றுக்கொள்ளுங்கள்! கரைதலில் இதழ் சுவையை விஞ்சும் பெரும்சுகம் உண்டு!!
விஷன்.வி

No comments:

Post a Comment