முதல் அதிகாரம் - 2

18000 வருடங்களுக்கு முன்பிருந்த கன்னியாகுமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, காலஇயந்திரத்தில் ஏறி, வருடம், நாள், நேரம், இடம் என அத்தனையும் டைப் செய்துவிட்டு, அடுத்த ஆறாவது நொடியில் என்ன நடக்குமோ என்கிற ஆச்சரியத்திலும், பயத்திலும் கண்களை மூடிக்கொண்டேன்.

1.. 2.. 3.. 4.. 5..

ஐந்து நொடிகள் கடந்து விட்டன. இப்போது  நான் 18000 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்க வேண்டும். இத்தனை வருடங்கள் முன்பு செல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே நடுக்கடலில் மாட்டிக்கொண்டோம். இம்முறை எந்த இடத்தில் சென்று மாட்டிக்கொள்ளப்போகிறோமோ என்ற பயம் மட்டும் இருந்தது. இம்முறை கடலில் மூழ்கும் உணர்வு எதுவும் இல்லை. உண்மையாகவே 18000 வருடங்களுக்கு முன்பு வந்துவிட்டோமா அல்லது இன்னும் சென்னையில்தான் இருக்கிறோமா?? கண்களைத் திறக்காமலேயே யோசித்தேன். கண்டிப்பாக சென்னை இல்லை. மலர்களின் வாசமும், மழைவிழுந்த ஈரமண்ணின் வாசமும் ஒருசேர வீசுவதை என்னால் நுகரமுடிகிறது. மிதவேகத்தில் அடிக்கிறக் காற்று, வாசனையோடு என்னைக் கடப்பதை கண்களைத் திறக்காமலேயே உணர்கிறேன். இது சென்னையில் நிகழ சாத்தியமில்லை.

திரைப்படங்களில் வெற்றிகரமாக கண் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபின், கண்களில் கட்டியிருக்கும் வெள்ளைத்துணியை பூப்போல மருத்துவர் அவிழ்த்ததும், மொட்டு மலர்வதைவிட  மென்மையாக கண்களைத் திறக்கும் கதாநாயகியைப்போல, என் கண்களைத் திறந்தேன். வெகுநேரம் தியானத்தில் இருந்துவிட்டு கண்களைத் திறக்கும் புத்தபிக்குவைப்போல என்றும் இதனைச் சொல்லலாம்.

உண்மைதான். நான் சென்னையில் இல்லை. தார்ச்சாலைக்குப் பதிலாக, மிக இறுக்கமாக போடப்பட்ட நீளமான செம்மண் சாலை. அப்போதுதான் லேசான மழைபொழிந்து நின்றிருக்கிறது என்பதை அந்த செம்மண்ணின் ஈரமும், வாசமும் சொல்கிறது. சாலையின் இரு ஓரங்களிலும் சீரான இடைவெளிவிட்டு வளர்ந்து நிற்கிற மிகப்பெரிய மரங்கள். பார்ப்பதற்கு அவை, நம்மூர் கிராமங்களில் நிற்கும் அரசமரங்களைப்போல இருக்கிறது. நீள்வட்டத்தில் இருக்கும் ஆரஞ்சுநிற இலைகள் அந்த மரத்தின் அழகையும், சாலையின் அழகையும் கூடுதல் அழகாக்குகிறது. சாலையின் இரண்டு பக்கங்களும், மிகப்பெரிய மணற்பரப்பும், ஆங்காங்கே மரங்களுமாக பரந்துவிரிந்திருந்திருக்கிற நிலம், அடர்த்தி குறைந்த வனம்போல காட்சியளித்தது. எனக்கு நேர்எதிரே நிற்கும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த குயிலைப்போன்ற  ஒரு பறவை, என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் அலகு மட்டும் கிளியின் அலகைப்போல சிவந்த நிறத்தில் இருக்கிறது. சட்டென்று தன் அலகைத்திறந்து ஏதோசொல்லிவிட்டு உயரமாகப் பறந்தது. யாருக்கு சேதிசொல்ல பறக்கிறது என்று  தெரியவில்லை. இப்போது நான் ஆளரவமற்ற மதியநேரத்து தேசியநெடுஞ்சாலையில் தனியே நிற்பதுபோல் நின்றுகொண்டிருந்தேன். மன்னிக்கவும் காலஇயந்திரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். தனிமை எப்போதும் நம்மை யோசிக்க வைக்கும். யோசிக்கத்தொடங்கினேன். கன்னியகுமரிக்குத்தானே வந்தோம். இங்கே அதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லையே?! திருவள்ளுவர் சிலை இல்லை. விவேகானந்தர் பாறை இல்லை. ஐயோ!! கடல் எங்கே? குமரி என்றாலே கடல்தானே?! கடலே இல்லாதபோது எங்கிருந்து விவேகானந்தரும், திருவள்ளுவரும்?! இந்தக் காலஇயந்திரம் கன்னியகுமாரிக்குப் பதிலாக வேறு ஊரில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டதா? ஏன் ஊர்மாற்றி இறக்கிவிட்டாய் என்று சட்டையைப்பிடித்துக் கேட்பதற்கு நடத்துனர் யாரும் இந்த வாகனத்துக்கு இல்லையே?! என்ன செய்வது?! சிவப்பு பொத்தானை அழுத்தி மீண்டும் சென்னைக்கே சென்று விடலாமா? முதலில் கீழே இறங்குவோம். நம்மூரைப்போல லிஃப்ட் கொடுத்து உதவுவதற்கு யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கலாம். கீழே இறங்கினேன்.

இந்த இயந்திரம் அழகாக மடங்கி, பின் சுருங்கி, ஒரு சூட்கேஸைப்போல மாறும் அழகுக்கே இதைக்கண்டுபிடித்த கைக்கு ஒரு வைரமோதிரம் பரிசளிக்க வேண்டும். வேண்டாம். அவ்வளவு வசதியில்லை. தங்கமோதிரம் போதும். சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்தச்சாலை சிறிய வளைவுநெளிவுகளுடன் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியே இந்தச் சாலையோரமாக நடந்தால் ஏதேனும் ஊர் வரலாம். நடக்கத்தொடங்கினேன். இங்கே நடப்பதில் எந்தக்கடினமும் இல்லை. வெயில் இல்லை. புழுதி இல்லை. இரைச்சல் இல்லை. செம்மண் சாலைதான் என்றாலும் மேடுபள்ளங்கள் எதுவும் இல்லை. தனியே நடக்கிறோம் என்கிற வருத்தத்தைத்தவிர வேறு எதுவுமே இல்லை. கூடநடப்பதற்கு யாரேனும் இருந்தால், எத்தனை மைல்கள் வேண்டுமானாலும் இந்தச்சாலையில் நடக்கலாம். அரைமணி நேரமாக நடக்கிறேன். இதுவரை ஒருமனிதரைக்கூட பார்க்க முடியவில்லை.

டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..

தூரத்திலிருந்து ஒரு குதிரை வந்துகொண்டிருக்கும் சத்தம். "நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா" பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் அதே குதிரை ஓடும் சத்தம். பயத்தோடும், ஆச்சரியத்தோடும் மெதுவாகத் திரும்பிப்பார்த்தேன். மீண்டும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் குதிரையில் வந்து கொண்டிருந்தார். 18000 வருடங்களுக்கு முன்னால் எப்படி எம்.ஜி.ஆர்?? ஆனால் குதிரையில் வருபவர் கொஞ்சம் கருப்பாக இருந்தது சந்தேகத்தை வரவழைத்தது. குதிரை இப்போது என்னை நெருங்கிவிட்டது. குதிரையில் யார் வந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் வருவதுபோலவேத் தோன்றுவது வேடிக்கை. இது யாரோ நம்பியார்போல் இருக்கிறது. முறைத்துக்கொண்டே  வருகிறான். உடம்போடு ஒட்டியிருக்கும் நீளமான சிவப்பு அங்கியை அணிந்திருக்கிறான். தையல்காரரிடம், உடை, உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்ச்சியாக இருக்காது என்று சொல்லி தைத்திருப்பான் போல. அத்தனை இறுக்கமாக இருந்தது அந்த அங்கி. இளஞ்சிவப்பு நிறத்தில் கால்சட்டை. கொஞ்சம் சுகவாசிபோல் தெரிகிறது. கால்சட்டை காற்றுப்புகும் அளவிற்கு தளர்வாக இருந்தது. சல்வார் கமீஸ்போல,  கால் மாணிக்கட்டுக்கு கீழே மட்டும் இறுக்கமாக இருந்தது. தோலில் செய்த ஒரு கச்சை, இடுப்பை அலங்கரித்துக்கொண்டிருந்தது. இடுப்பின் இடதுபுறத்தில் ஒரு நீளமான வாளும், ஒரு குறுவாளும் தொங்கிக்கொண்டிருந்தன. பொன்னிறத்தில் வாள்களின் கைப்பிடிகள் மட்டும் வாள் உறைகளின் மேலே தெரிந்தது. வலதுபக்கம் அடிப்பாகம் நன்றாக வளைந்திருக்கும் சற்றுநீளமான  குறுவாள் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கைப்பிடி எதுவும் மேலே தெரியவில்லை. பார்ப்பதற்கு நம்மூர் காவல்துறை அதிகாரிகளின் மூடியிருக்கும் துப்பாக்கி உறையைப்போல இருக்கிறது. இரண்டடி நீளமான தலைமுடியை, பெண்களின் ஒற்றை ஜடையைப்போல பின்னியிருந்தான். இரண்டுவார தாடி, மீசையை அழகாக செதுக்கி ஒதுக்கியிருந்தான். ஏதோவொரு சவரக்காரரின் கைவண்ணமாக இருக்கலாம்.  அதிகபட்சம் இவனுக்கு முப்பது வயதிருக்கலாம். இளநரை எதுவும் இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறது போலிருக்கிறது.  பெரிய விழிகள். கூர்மையான பார்வை. சுருங்கச்சொல்ல வேண்டுமென்றால் நாம் இலக்கியங்களில் படித்த போர்வீரனின் தோற்றத்தில் இருந்தான்.       
நான் அவனைப் பார்ப்பதுபோலவே அவனும் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். என்னைவிட கூர்மையாக, ஒரு வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான். பேசத்தொடங்கினான்.

"யாரப்பா நீ? உன் தோற்றமே நகைச்சுவையாக இருக்கிறதே? ஏன் உன் முகத்தின் நிறம் இப்படி வெளிறிப்போய் இருக்கிறது? கேசத்தை ஏன் வெட்டியிருக்கிறாய்?" 

ஒரேநேரத்தில் இத்தனை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். அவன் கறுப்பாக இருந்துகொண்டு, என்னைப்பார்த்து ஏன் உன் முகம் வெளிறிப்போய் இருக்கிறது என்று கேட்கிறானே? அவனுக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்துக்கு நடுவிலும், அவன் பேசுகிற அழகான தமிழ் மகிழ்ச்சியைத் தருகிறது.

"ஏன் எதுவும் கதைக்காமல் இருக்கிறாய்? வாய்பேச இயலாதா? எங்கேயிருந்து வருகிறாய் நீ?"

" அதெல்லாம் நல்லாவே பேசுவேன் சார். சென்னைலேந்து வர்றேன் "

" என்ன உளறுகிறாய்? நீ பேசுகிற மொழியே புரியவில்லையே? வேற்று நாட்டிலிருந்து வந்திருக்கிறாய் என்பது மட்டும் புரிகிறது. எங்கள் நாட்டை வேவுபார்க்க வந்தாயா?" கோபமாக முறைத்தான்.

பழக்கதோஷத்தில் இங்கே பேசுவதுபோல் பேசிவிட்டேன். முடிந்தவரை நல்ல தமிழில் பேசிவிட வேண்டியதுதான். "வேவு பார்க்க வரவில்லை வீரனே! தூரதேசத்திலிருந்து வருகிறேன். நமது நாட்டைச்சுற்றிப்பார்க்கவே வந்தேன்." என் தமிழைக்கேட்ட, அவனது முகம் கொஞ்சம் மலர்ந்தது. நான் படித்த தமிழ்வழிக்கல்வியும், புத்தகங்களும் இப்போது கைகொடுத்திருக்கிறது.

முகம் மலர்ந்தாலும், அவன் சந்தேகம் தீரவில்லை என்பது மட்டும் அவனது கண்களில் தெளிவாகத் தெரிந்தது.

"உண்பதற்கு வழியில்லாத தேசத்திலிருந்தா வருகிறாய்? என் இப்படி மிதியடியில் கால்சட்டை தைத்து அணிந்திருக்கிறாய்?"   

ஜீன்ஸை இதைவிட கேவலமாக கலாய்க்க யாராலும் முடியாது. பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

"உன் தோற்றமும், ஆடையும், தலையோடு ஒட்டிய கேசமும் ஏதோ பட்டினி தேசத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதைச்சொல்கிறது" அவனது கண்களில் கேலி தெரிந்தது.

என் கையில் இருக்கும் காலஇயந்திரத்தை உற்றுப்பார்த்தான். "உன் கையில் இருப்பது என்ன? எங்கள் நாட்டின் கைதிகளுக்கு உணவளிக்கும் தட்டின் நிறத்தில் இருக்கிறதே?

மீண்டும் கேலி பேசுகிறான்.

எனக்கு கோவம் வந்துவிட்டது. "யோவ்... சும்மா ஓவரா பேசாத.. சாப்பாட்டுக்கு வழியில்லாம ஒண்ணும் போயிடல. நீ உன் வேலையைப் பாத்துட்டுட்டு போயா யோவ்" அவனுக்கு பாஷை புரியாது என்கிற தைரியத்தில்தான் பேசினேன்.

என் மொழியைக்கேட்டு ஆச்சரியத்தில் கண்களைச்சுருக்கி மீண்டும் சகஜ நிலைக்கு வந்தான்.

"இதுதான் உன் பட்டினி தேசத்தின் மொழியா ? உன் ஆடையைப்போலவே உன் மொழியும் வறுமையாக இருக்கிறது"

சங்கம் வளர்த்த உலகத்தின் மூத்தமொழி, இந்த பதினெட்டாயிர வருடத்தில்  வளர்ந்து, பல வடிவங்களைக் கடந்து , பின் உருமாறி, இன்று  அவன் பார்வையில் தளர்ந்து நிற்கிறதுபோல. அதனால்தான்  உன் மொழி வறுமையாக இருக்கிறது என்கிறான்.

இம்முறை குற்றவுணர்ச்சியினால் அமைதியாக நின்றேன்.

"மூடனே. புரவியில் ஏறு"

அவன் மூடன் என்றதும் என் குற்றவுணர்ச்சி மறைந்து , கோபம் அதிகமாகி விட்டது. அரசியல் விஞ்ஞானிகள் இருக்கும் ஊரிலிருந்து வந்திருக்கும் என்னைப்பார்த்து மூடன் என்று சொன்னால் கோபம் வராதா என்ன? "யோவ்.. நீ இதே மாதிரி பேசிட்டு இருந்தேன்னு வச்சுக்கோயேன்..இந்த மெஷின்ல தூக்கிப்போட்டு எங்க ஊருக்கு கொண்டு போயிடுவேன் பாத்துக்க. அப்பதான் நான் மூடனா அல்லது நீ மூடனானு தெரியும்."

மொழி புரியவில்லை என்றாலும், நான் கோபமாக இருக்கிறேன் என்பது அவனுக்கு புரிந்துவிட்டது போல.  "மூடனை, மூடன் என்றுதான் அழைக்க முடியும். வாயை மூடிக்கொண்டு புரவியில் ஏறு. அரசவைக்குச் செல்லலாம். நீ நாட்டைச்சுற்றி பார்க்க வந்தாயா? அல்லது வேவு பார்க்க வந்தாயா என்று அங்கு தெரிந்துவிடும்."

ஆஹா!! மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பது புரிந்தது. சட்டென பயம் மேலிட, கால்கள் நடுங்கத்தொடங்கியது. அரசவை என்கிறான். அங்கே சென்றால் என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்? சந்தேகத்தில் நம்மைக் கொன்றுவிட்டால் என்ன செய்ய? அநியாயமாக  இப்படி 18000 வருடங்களுக்கு முன்பு வந்தா சாகவேண்டும்?  வேறுவழியில்லை. டைம் மெஷினில் ஏறி, சிவப்பு பட்டனை அழுத்தி ஊருக்குச் சென்றுவிட வேண்டியதுதான். ஆனால் இவன் அருகில் நின்றால் அதைச்செய்ய முடியாது. அடுத்தநொடியே , சாலையைவிட்டு இறங்கி மரங்கள் நிறைந்திருக்கும் மணற்பரப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

"மூடனே நில்" என்று கத்தினான். திரும்பாமல் நடையின் வேகத்தைக்கூட்டினேன்.

"நிற்கிறாயா அல்லது வளரியை வீசவா" அவனது குரல் இம்முறை  சற்று கோபமாகக் கேட்டது.

வளரி வேறு வைத்திருக்கிறானா? இனி ஓடினாலும் பயனில்லை. மெதுவாகத் திரும்பினேன். 'வா' என்பதுபோல் தலையை அசைத்தான். பயந்தபடியே அவனைநோக்கி நடந்தேன். என் பயத்தை ரசித்தபடியே என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் சென்றதும் சட்டென்று தன் இடதுகையால் என் சட்டையைப்பிடித்து, அலேக்காகத் தூக்கி குதிரையில், அவனுக்கு முன்பாக அமரவைத்தான். "நான் என்ன ஹீரோயினாடா? உன்கூட பாட்டு பாடிட்டே குதிரையில வர்றதுக்கு" என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த பயத்திலும் ஆர்வமிகுதியால் "உன் வலதுபக்க இடுப்பில் தொங்குகின்ற உறையில் இருப்பதுதான் வளரியா?" என்றேன்..

சட்டெனப் பறந்தது குதிரை!!!

- வளரியோடு மீண்டும் வருகிறேன்.

No comments:

Post a Comment